சமீப காலமாக தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக கொண்ட பரபரப்புகள் அதிகரித்து வருகின்றன. முக்கிய கட்சிகள் மற்றும் நடிகர்களின் அரசியல் பிரவேசங்கள், கூட்டணியின் எதிர்காலம் குறித்த பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி, அரசியல் சூழலை சூடுபிடிக்க வைத்துள்ளார். இவருக்கு போட்டியாக, பிரேமலதா விஜயகாந்த், சீமான் மற்றும் காங்கிரஸ் கட்சியும் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த மாநாடுகள் கட்சிகளின் செல்வாக்கையும், கூட்டணியில் தங்கள் பலத்தையும் உணர்த்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான திமுக, காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே அதிக இடங்களை வழங்கியுள்ளதால், மேலும் கட்சிகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் கூடுதல் இடங்களைக் கோரி வருகின்றன.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், இரண்டு பெரிய மாநாடுகளை நடத்தி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது வருகை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், மற்ற கட்சிகளுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
நீட், கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து விஜய்யின் பேச்சுகள், ஆழம் குறைவாக இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், கல்லூரிகளில் இன்றும் இளைஞர்கள், குறிப்பாக பெண் மாணவர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவு வலுவானது. எம்.ஜி.ஆர். மற்றும் விஜயகாந்துடன் ஒப்பிடுகையில், விஜய்யின் கட்சிக்கு ரசிகர்களின் வாக்குகள் எந்த அளவுக்கு முழுமையாக மாறும் என்பது இனிமேல் தான் தெரியும்.
விஜய் தற்போது திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து வருகிறார். எனவே, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், அவரது அரசியல் கட்சி, தற்போதைய நிலையில், இன்னும் பலமிக்க இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாத ஒரு புதிய கட்சியாகவே உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி, டெல்லியில் உள்ள ராகுல் காந்தி தலைமையின் முடிவுகளை சார்ந்தே செயல்படுகிறது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சிக்குள் உள்ள விமர்சனங்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருக்கிறார். அவரை நீக்கினால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் தலைமை தயங்குகிறது.
விசிக கூட்டணிக்கு ஒரு ‘சுமை’யாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் அக்கட்சி அதிக இடங்களை கேட்பது மட்டுமின்றி தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களை கேட்டு பெற்று கொண்டால், அந்த கட்சியால் கூட்டணிக்கு எந்த லாபமும் இல்லை. விசிகவுக்கு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போல் செல்வாக்கு இல்லை, செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை அவர்கள் கேட்டு பெற்று அதில் வெற்றி பெற்று கொள்கிறார்கள். எனவே விஜய், விசிகவை அழைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கருத்து வேறுபாடுகள், திமுகவை விமர்சிப்பதால் அவர்களின் வாக்கு வங்கியை பாதிப்பதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு தொடர்ந்து நீடித்தால், திமுக அதை பயன்படுத்தி பாமகவை பலவீனப்படுத்த வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
