தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், ஆரம்பத்தில் பரபரப்பு இல்லாமல் இருந்தாலும், விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநில மாநாடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக ஒரு வலிமையான கட்சி தோன்றுமா என தமிழக மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அந்த காலம் கனிந்து விட்டதாகவே அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில், கண்டிப்பாக திமுக, அதிமுகவுக்கு விஜய் ஒரு மாற்று சக்தியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளை ஒரு புதிய கட்சி ஒரே நேரத்தில் எதிர்ப்பது என்பது இதுவரை தமிழக அரசியலில் இல்லாத நிகழ்வாகவும், அதை விஜய் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், திமுகவை படுமோசமாக விமர்சனம் செய்தாலும், அதிமுகவிடம் அவர் நெருங்கவில்லை என்றும், அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை என்றாலும் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, திமுக-அதிமுகவுக்கு மாற்று சக்தியாக விஜய் இருப்பார் என்று மக்கள் இப்பவே நம்ப தொடங்கி விட்டனர். மேலும், விஜய் தனது நெருக்கமான ஆதரவாளர்களிடம்,
“கண்டிப்பாக நாம் இந்த தேர்தலில் ஜெயிப்போம். நான் தான் முதல்வர் பதவியேற்பேன். அதற்கு ஒரே காரணம் திமுக, அதிமுக மீது மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தான். தற்போது ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஆட்சி செய்த அதிமுகவின் பத்து ஆண்டு கால ஆட்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. எனவே இந்த இரு கட்சிகள் மீது அதிருப்தியாக இருப்பவர்கள் நிச்சயமாக நமக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.
அதேபோல் இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களும் நமக்கு கண்டிப்பாக வாக்களிப்பார்கள். சீமான் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து கொண்டிருப்பதால், அவரது கட்சியில் உள்ள இளைஞர்களின் ஓட்டுகளும் நமக்கு கிடைக்கும்.
எனவே கருத்துக்கணிப்புகளையும் அரசியல் விமர்சகர்களின் கூற்றுகளையும் கண்டு கொள்ளாமல், நமது கட்சியை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய் சேர்க்கும் வேலையை மட்டும் பாருங்கள்.
நகர்ப்புற வாக்காளர்கள் நிச்சயம் ஓட்டு போடுவார்கள். ஆனால் கிராமத்தில் உள்ளவர்கள் மனதை மாற்றுவது தான் கொஞ்சம் கஷ்டம். அந்த முயற்சிகளில் ஈடுபடுங்கள்”
என்று விஜய் தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய்யின் இந்த கணக்கு பலிக்குமா? அவர் இரண்டு திராவிட கட்சிகளையும் மீறி ஆட்சி அமைப்பாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.