நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் சமீபத்தில் நடத்திய அரசியல் மாநாடு மற்றும் அவரது பேச்சுக்கள், தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருவது, அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளின் தாக்கம், எதிர்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையே காட்டுகிறது.
அரசியல் சர்ச்சை மற்றும் எதிர்வினைகள்
விஜய் தனது அரசியல் பேச்சில் முதலமைச்சர் முக ஸ்டாலினை, “அங்கிள்” என்று குறிப்பிட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த சொல், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகளை தூண்டியது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து, சீமான் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போன்றோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததோடு, தவெக மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் மாநாட்டில் ஒரு தொண்டர் பவுன்சர்களால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, விஜய் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட நடவடிக்கை, விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
முன்னரே திட்டமிடப்பட்ட வியூகமா?
விஜய்யின் நடவடிக்கைகள், குறிப்பாக அவரது பேச்சு மற்றும் “அங்கிள்” சர்ச்சை, கவனத்தை ஈர்க்கவும், அவரது கட்சியின் செய்தியை வேகமாக பரப்புவதற்காகவும் திட்டமிடப்பட்ட ஒரு வியூகமாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் ஆய்வாளர்கள், விஜய்யின் ஒவ்வொரு அசைவும் கவனமாக திட்டமிடப்பட்டு, மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு முயற்சியாகவே தெரிகிறது என்று கூறுகின்றனர்.
வருங்கால சவால்கள்
செப்டம்பர் 17-ஆம் தேதி நடைப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நடைப்பயணத்திற்கு ஆளும் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி பெறுவது, ஆளும் கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது போன்ற சவால்களை விஜய் சந்திக்க நேரிடும். இந்த சவால்கள் அவரது அரசியல் பயணத்தின் வெற்றியை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
