தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதான விமர்சனங்களும், மிரட்டல்களும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. “நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா” என்ற ரீதியில், திரைத்துறையில் பல சவால்களை கடந்து வந்த விஜய்யை, இப்போது சிபிஐ விசாரணையை காட்டிப் பயமுறுத்த பார்ப்பது வேடிக்கையானது.
மத்திய புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஒரு வளர்ந்து வரும் அரசியல் சக்தியை ஒடுக்கிவிடலாம் என்று நினைப்பவர்கள், விஜய்யின் நிதானத்தையும் அவரது மௌனத்திற்கு பின்னால் இருக்கும் வலிமையையும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. விசாரணை அமைப்புகள் என்பது அரசியல் எதிரிகளை முடக்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படும் வரை, அவை விஜய்யை போன்ற ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரை எவ்விதத்திலும் அசைக்க முடியாது. மேலும் விஜய் மீது புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால், நடவடிக்கை எடுப்பவர்களுக்கு எதிராகவே மக்கள் திரும்புவார்கள் என்ற ஆபத்தும் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதா?
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவம் ஒரு தற்செயலான விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டில் எது உண்மையானாலும் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்க போவதில்லை. ஒரு விபத்தாக இருந்தால் அது நிர்வாக சீர்திருத்தங்களுக்கான பாடமாக அமையும்; ஒருவேளை அது சதியாக இருந்தால், விஜய்யை முடக்க துடிக்கும் சக்திகள் யார் என்பதை மக்கள் இன்னும் தெளிவாக புரிந்துகொள்வார்கள். இத்தனை உயிரிழப்புகளுக்கு பிறகும் அவர் துவண்டுவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தோள் கொடுப்பதோடு, நீதிக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணைக்கு வழிவகை செய்திருப்பது அவரது பொறுப்புள்ள தலைமை பண்பைக் காட்டுகிறது.
சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தங்களை அரசியல் மேதைகளாக காட்டி கொள்ளும் சில பெய்டு விமர்சகர்கள் விஜய்யை பற்றி பரப்பும் வதந்திகளுக்கு அளவே இல்லை. காசு வாங்கி கொண்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும், மறுபுறம் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் குறைகூறி பேசுபவர்களின் வார்த்தைகளுக்கு விஜய் ஒருபோதும் அஞ்சுபவர் அல்ல. திரையில் பார்த்த ‘மாஸ்’ ஹீரோவை விட, நிஜத்தில் அரசியல் களத்தில் மிக அமைதியாகவும், அதே சமயம் தீர்க்கமாகவும் களம் காணும் விஜய், இந்த வதந்திகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. விமர்சனங்கள் என்ற பெயரில் வெறுப்பை உமிழும் நபர்களுக்கு தனது செயல்களின் மூலமே பதிலடி கொடுக்க அவர் காத்திருக்கிறார்.
நிஜத்தில், வாய் பேச்சில் வீரம் காட்டும் நபர்களை விட, பேசாமலே காரியத்தை சாதிக்கும் விஜய்யின் அணுகுமுறைதான் ஆளுங்கட்சிக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மேடைகளில் மணிக்கணக்கில் பேசி கொண்டிருப்பவர்கள் பெரிதா அல்லது எந்த ஆரவாரமும் இன்றி லட்சக்கணக்கான இளைஞர்களை ஒருங்கிணைத்து அமைதியாக தனது பலத்தை நிரூபிக்கும் விஜய் பெரிதா என்ற கேள்விக்கான விடை விரைவில் கிடைக்கும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; அந்த மாற்றம் வெறும் வார்த்தைகளில் இருக்கக்கூடாது, செயல்களில் இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு மௌனமும் ஒரு பெரிய அரசியல் புயலுக்கான முன்னறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக மக்கள் தற்போதைய அரசியல் கூத்துக்களை உற்று நோக்கி கொண்டுதான் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அரசியல் களத்தில் “நிலைய வித்வான்களாக” இருந்து கொண்டு, மக்களை ஏமாற்றி வந்த பலரின் ஆட்டம் 2026-ல் முடிவுக்கு வரும். ஊழல், வாரிசு அரசியல் மற்றும் மக்கள் விரோத போக்குகளைத் தட்டி கேட்கும் ஒரு புதிய சக்தியை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். பழைய அரசியல் சூத்திரங்களை வைத்து கொண்டு விஜய்யை வீழ்த்த நினைப்பவர்கள், புதிய தலைமுறை வாக்காளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள தவறிவிட்டார்கள். 2026 தேர்தல் முடிவுகள் வரும்போது, இத்தனை நாள் எக்காளமிட்டு பேசியவர்களின் குரல்கள் அடங்கி போகும் என்பது நிச்சயம்.
இறுதியாக, மிரட்டல்களும் உருட்டல்களும் ஒரு தலைவனை உருவாக்குவதில்லை; மக்களின் அன்பும் அவர் காட்டும் நேர்மையும் தான் ஒரு தலைவனை அரியாசனத்தில் அமர்த்தும். விஜய் மீதான சிபிஐ விசாரணை என்ற பூச்சாண்டி காட்டுபவர்கள், அது அவருக்கு இன்னும் கூடுதலான மக்கள் ஆதரவையே பெற்றுத்தரும் என்பதை உணர வேண்டும். அரசியல் களம் இனி ஒரு சில குடும்பங்களுக்கு அல்லது கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல; அது மக்களுக்கானது என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிவிட்டது. விஜய்யின் அரசியல் பயணம் என்பது ஒரு நீண்ட ஓட்டம்; அதில் இடையில் வரும் தடைகளை தகர்த்து அவர் இலக்கை அடைவார் என்பதில் அவரது தொண்டர்கள் மட்டுமன்றி, மாற்றத்தை விரும்பும் சாமானிய மக்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
