நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற தனது கட்சியை தொடங்கிய பிறகு, சனிக்கிழமைதோறும் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவரது முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் நடந்த நிலையில், அது தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. இந்த மாநாடு, ஆளும் தி.மு.க. அரசுக்கு ஒரு கடுமையான சவாலாகவும், வருங்கால அரசியலின் திசையை மாற்றும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சார பயணம் திண்டுக்கல்லில் முடியும்போது திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தனது பயணத்தின் முதல் அறிவிப்பிலேயே, தான் காலை 10:25 மணிக்கு உரையாற்ற தொடங்குவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், விமான நிலையத்திலிருந்து பொதுக்கூட்ட மைதானமான மரக்கடை பகுதிக்கு அவர் வருவதற்கு பல மணி நேரங்கள் ஆனது. இதற்கு முக்கிய காரணம், வழியெங்கும் அலை அலையாக திரண்டிருந்த மக்கள் கூட்டம். கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்தை கடக்க நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. போக்குவரத்து நெரிசல் காரணமாகவே அவர் தாமதமாக வந்தார் என்று கூறப்படுகிறது.
காவல்துறை, விஜய் மேடையில் ஏறி நின்று கையை அசைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. ஆனால், அவரது வாகனத்திற்குள் இருந்தபடியே அவர் தனது ரசிகர்களுக்கு கைகாட்டியது, பெரும் கூட்டத்தைக் கூட்டியது. இது ஆளுங்கட்சிக்கு ஒரு முகத்தில் அடித்த பதில் போல அமைந்தது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில், அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டதுபோல, இப்போது விஜய்யின் வருகை மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களிலேயே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒலிபெருக்கி வேலை செய்யாமல் போனது. இதன் காரணமாக அவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச முடியாமல் போனது. ஆனால், இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, திட்டமிட்ட சதி என்று பலரும் கருதுகின்றனர். காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள், ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி மறுப்பு ஆகியவை தி.மு.க. அரசின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். “எம்.ஜி.ஆர். பேச்சை கேட்க மக்கள் கூடினர். ஆனால், அவரது உடல்மொழியே ஒரு செய்தியை அனுப்பியது. அதுபோல, விஜய்யின் உடல்மொழியும், அவர் பேச விடாமல் தடுக்கப்பட்டது என்பதும் மக்களிடையே ஒரு செய்தியை பரப்பிவிட்டது” என்று மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது பேச்சில், “நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, செய்தீர்களா?” என்று நேரடியாக தி.மு.க. ஆட்சியாளர்களை கேள்வி கேட்டார். ஜெயலலிதா தனது கூட்டங்களில் கேட்டது போல, “செய்வீர்களா?” என்ற பாணியை பின்பற்றியது கவனத்தை ஈர்த்தது. மேலும், “கல்விக் கடன்கள் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம்” போன்ற மக்கள் சார்ந்த பிரச்சனைகளையும் அவர் வெளிப்படையாக பேசினார். இது தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கிகளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் அதிருப்தியை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் இந்த கேள்விகள், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளன.
திருச்சி மாநாடு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சாதகமானது என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த அரசியல் விமர்சகர் ஒருவர் “நான் விஜய்யை சாதி மத அடிப்படையில் பார்க்க விரும்பவில்லை. தி.மு.க. அப்படி பேசினால், அவர்களும் ‘குட்டி பா.ஜ.க.’ என்று பெயர் பெற்றுவிடுவார்கள்” என்று சுட்டிக்காட்டினார். விஜய், தன்னை எந்த ஒரு சாதி, மத வட்டத்திற்குள்ளும் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பதை அவரது பேச்சும், ஆதரவாளர்களின் பின்னணியும் காட்டுகிறது.
விஜய்யின் திருச்சிப் பயணம் ஒரு ஆரம்பம் மட்டுமே. இது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில், விஜய் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும், ஆளும்கட்சிக்கு மேலும் சவால்களைக் கொடுக்கலாம். “விஜய் கூட்டங்கள் வாக்குகளாக மாறாது” என்று தி.மு.க.வினரும், “தி.மு.க. வாக்குகள் சிதறினால் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்” என்று அ.தி.மு.க.வினரும் கருதுகின்றனர். ஆனால், இந்த இரு கட்சிகளின் எதிர்பார்ப்புகளையும் மீறி, விஜய்யின் இந்த புதிய அரசியல் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர்.
அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, மக்களும், “போர் வீரர்கள் குலதெய்வத்தை வணங்குவது போல, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன்” என்று அவர் கூறியது, அரசியல் தலைவர்கள் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியதாகவே தெரிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
