தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கூர்ந்து கவனித்து வரும் நிலையில், அவருக்கு மிக நெருக்கமான ஒரு முக்கிய பிரபலம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் அவரது முயற்சி ஒரு மிகப்பெரிய தவறு என்றும், இந்த கூட்டணியால் த.வெ.க.வுக்கு எந்த பலனும் இருக்காது என்றும் வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு ஆலோசனை வழங்கிய அந்த பிரபலம், காங்கிரஸுடன் சேர்வது த.வெ.க.வுக்கு ஒரு தேவையில்லாத சுமையாக அமையும் என்றும், அரசியல் ரீதியாக விஜய் பின்னடைவுக்கு இது வழிவகுக்கும் என்றும் விமர்சித்துள்ளார். த.வெ.க. தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தேய்மானம் அடைந்துள்ள ஒரு தேசிய கட்சியுடன் கைகோர்ப்பது, விஜய்யின் இந்த புதிய பிம்பத்தையும், இளைஞர்கள் மத்தியில் அவருக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கையும் மங்க செய்துவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பெரிய பலம் இல்லாததால், இந்த கூட்டணியின் மூலம் விஜய்க்கு எந்த பயனும் இல்லை. மாறாக, விஜய்யின் மக்கள் செல்வாக்கு, காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் உயிர் கொடுக்க பயன்படுமே தவிர, த.வெ.க.வின் வெற்றிக்கு பங்களிக்காது என்றும், விஜய்க்கு பயன் பூஜ்ஜியம் என்றும் அந்த பிரபலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கூட்டணியின் மூலம் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பார்க்கும் லாபத்தைவிட, காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் லாபம் மிக அதிகம். த.வெ.க.வின் ஆதரவு கிடைத்தால், காங்கிரஸ் கட்சி அதன் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறிப்பாக, கேரளாவில் நடிகர் விஜய்க்கு உள்ள மிகப்பெரிய ரசிகர் பட்டாளம், அங்கு ஆளும் சிபிஎம் கட்சிக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற காங்கிரஸுக்கு பெரிதும் உதவும்.
புதுச்சேரியில் தமிழர்களின் வாக்குகளே அதிகம் என்பதால், அங்கு ஆட்சியை உறுதிப்படுத்தவும் த.வெ.க.வின் ஆதரவு காங்கிரஸுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதன்மூலம், காங்கிரஸ் கட்சி தென் இந்தியாவில் தன்னுடைய அரசியல் பலத்தை அதிகரித்து கொள்ளும். இதன் விளைவாக, காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைக்குமே தவிர, த.வெ.க. ஒரு துணை அமைப்பாக மட்டுமே கருதப்படும் நிலை ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் முக்கிய சாரம் என்னவென்றால், இந்த கூட்டணியை தவிர்த்து, தனது தனித்துவத்தை பலிகொடுக்காமல், எதிர்வரும் தேர்தலை தனித்துப் போட்டியிடுவதன் மூலமே த.வெ.க. உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்பதே ஆகும். இதன்மூலம், எந்த கட்சிக்கு விஜய் ஆதரவு கொடுக்கிறார் என்பதே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்ற பேச்சு வலுப்பெறும் என்றும், குறுகிய கால ஆதாயத்துக்காக பழைய கட்சிகளின் சுமையை சுமக்காமல், ஒரு வலிமையான மாநில கட்சியாக வளர்வதே விஜய்க்கு உகந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
