எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி

By Keerthana

Published:

சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து, கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நோபல் பரிசுக்குரிய தகுதிகளுள் ஒன்று
கவிதைபூசிய உரைநடை என்று கணிக்கிறது நோபல் குழு, என் கவிதைச் சாரத்தை எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 53 வயதான புனைகதை எழுத்தாளரான ஹான் காங், 2007-ஆம் ஆண்டு எழுதிய தி வெஜிடேரியன்’ (The Vegetarian) என்னும் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது. உணவு உட்கொள்ளும் விதிமுறைகளுக்கு அடிபணிய மறுக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வன்முறையின் விளைவுகளை இந்த நாவல் சித்தரிக்கும். இந்த நாவலுக்குக்காகத்தான் நோபல் பரிசு ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடிஷ் அகாடமியின் கமிட்டி தலைவர் ஆண்டர்ஸ் ஓல்சன், நோபல் பரிசை அறிவித்துவிட்டு கூறும் போது, “வரலாற்றின் அதிர்ச்சிகரமான துயர் நிறைந்த அனுபவங்களை ஹானின் படைப்புகள் விவரிக்கின்றன. அவரது ஒவ்வொரு படைப்புகலும், மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. ஹான் “சமகால உரைநடையில் ஒரு புதுமைப்புகுத்தியுள்ளார்” இ அவரது “கவிதை மற்றும் தனித்துவமான பாணி” பாராட்டுக்குரியது என்று புகழ்ந்தார்.

இந்நிலையில் இந்த வரிகளை சுட்டிக்காட்டித்தான் வைரமுத்து பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வைரமுத்து கூறுகையில்,

“இவ்வாண்டு
இலக்கியத்துக்கு வழங்கப்படும்
நோபல் பரிசு
மூன்று வகைமைகளில் தனித்துவமானது

ஆசியாவுக்கு
வழங்கப்பட்டிருப்பது

ஒரு பெண் படைப்பாளிக்கு
வழங்கப்பட்டிருப்பது

54 வயது கொண்டவருக்கு
வழங்கப்பட்டிருப்பது

இந்த மூன்றுக்காகவும்
நோபல் பரிசுக் குழுவை
ஐயந்திரிபின்றிப் பாராட்டலாம்

பரிசு கொண்டிருக்கும்
தென்கொரிய எழுத்தாளர்
ஹான் காங்
வாழ்த்துக்குரியவர்

பரிசுப் பட்டயத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் ஒருவாசகம்
இலக்கிய விமர்சகர்கள்
ஊன்றி உணரத்தக்கது

“வரலாற்று அதிர்வுகளை எதிர்கொள்ளும் மற்றும்
மனித வாழ்வின் பலவீனத்தை
வெளிப்படுத்தும் அவரது
தீவிரக் கவிதை உரைநடைக்காக
நோபல்பரிசு வழங்கப்படுகிறது”

நோபல் பரிசுக்குரிய
தகுதிகளுள் ஒன்று
கவிதைபூசிய உரைநடை என்று
கணிக்கிறது நோபல் குழு

தண்ணீர் தேசம் படைப்பில்
ஆகாயத்தில் நீலம்போல்
இயல்பாக இழையோடிவந்த
என் கவிதைச் சாரத்தை
எள்ளி விமர்சித்தவர்கள்
இப்போது என்ன செய்வார்கள்?

இனி
வாயை மூடிக்கொள்வார்களா?
அல்லது
பேனாவை எறிந்துவிட்டு
மூடியால் எழுதுவார்களா?

உரைநடையில்
கவிதை கலப்பதை
வழிமொழியும்
நோபல் குழுவுக்கு
ஒரு தமிழ்ப் படைப்பாளியின்
நன்றி” இவ்வாறு வைரமுத்து கவிதை நடையில் நன்றி தெரிவித்துள்ளார்.