வெகுநேரம் வராத ரயில்கள்.. சென்னை சென்டிரல் உள்பட ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

By Keerthana

Published:

சென்னை சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில்கள் வெகுநேரம் வராததால் பயணிகள் நேற்று இரவு கடும் அவதி அடைந்தனர்.. வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே மின்தடை ஏற்பட்டதால் மின்சார ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து என்றால், அது மின்சார ரயில் போக்குவரத்து தான். ஆனால் மின்சார ரயில் போக்குவரத்தை அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் ரத்து செய்கிறது ரயில்வே. குறிப்பாக விடுமுறை நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடக்கிறது. அண்மையில் தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. பல்லாவரம் வரையே ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று சென்னை கடற்கரை- அரக்கோணம், சென்டிரல் – அரக்கோணம் இடையே மின்சார ரயில்சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மாலை 6 மணியளவில் திடீரென வியாசர்பாடி ஜீவா – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையே ஏற்பட்ட மின்தடை காரணமாக மின்சார ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. மின்தடை பாதிப்பை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் ஈடுபட்டனர்.

இதனால் அரக்கோணத்தில் இருந்து கடற்கரை மற்றும் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில்கள், பெரம்பூர், அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி என அனைத்து ரயில் நிலையங்களின் இடையே ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெகு நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தார்கள்

மேலும், சென்டிரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து ரயில் வெகுநேரம் வராததால் பயணிகள் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதியது. சில பயணிகள் மெட்ரோ ரயில் மூலம் பயணித்தனர். வேலை முடிந்து அனைவரும் வீடு திரும்பும் நேரம் என்பதால் சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. எந்த ரெயிலும் வராததால் பயணிகள் மிகவும் வேதனை அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மின்தடை பாதிப்பு சரி செய்யப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்ற பிறகே இயல்பு நிலை திரும்பியது.