தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். அண்மையில் அவர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டாலும், முழுமையான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்காக 12 பேர் கொண்ட சிறப்பு குழுவை ஜனவரி 2026யில் தான் அமைத்துள்ளார். இந்த குழு தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டு வருகிறது. இருப்பினும் தவெக தேர்தல் அறிக்கையில் சில முக்கிய விஷயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச கல்வி மற்றும் மருத்துவம் குறித்த விஜய்யின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அனைவருக்கும் தடையின்றி, இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதை தனது அடிப்படை அரசியல் கொள்கைகளில் ஒன்றாக விஜய் வைத்துதுள்ளார். அதேபோல், தூய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டமும் தவெக-வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவ கொள்கையின் அடிப்படையில், அடிப்படை தேவைகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
மதுவிலக்கு மற்றும் கள்ளுக்கடை திறப்பு குறித்த விவாதம் தவெக வட்டாரத்தில் இருந்து வருகிறது. டாஸ்மாக் மது கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை அமல்படுத்துவது விஜய்யின் லட்சியங்களில் ஒன்று. அதே சமயம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்ற கோரிக்கை தவெக-வின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மகளிர் உதவித்தொகையை நிறுத்திவிட்டு பெண்களுக்கு இன்னும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்களை விஜய் முன்மொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’ போன்ற ஏழைகளுக்கான உணவு திட்டங்களை சிதைக்காமல், இன்னும் மேம்பட்ட முறையில் கொண்டு வருவது குறித்த ஆலோசனைகள் தவெக-வின் கொள்கை விளக்கங்களில் உள்ளது.
வரி உயர்வு மற்றும் நிதி மேலாண்மை குறித்து தவெகவின் நிலை என்னவெனில் தற்போதைய ஆட்சியின் கீழ் அதிகரித்துள்ள மின்சார கட்டணம், சொத்துவரி மற்றும் இதர வரிகளை கடுமையாக சாடியுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்தால் சாமானிய மக்களை பாதிக்கும் தேவையற்ற வரிகள் உயர்த்தப்படாது என்றும், வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தின் மூலம் மாநிலத்தின் வருவாயை பெருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் மக்களின் நிதிச்சுமையை குறைப்பதே தவெகவின் பொருளாதார இலக்காக சொல்லப்படுகிறது.
இருப்பினும், தவெகவின் தேர்தல் அறிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அருண்ராஜ் தலைமையிலான 12 பேர் கொண்ட குழு தற்போதுதான் தரவுகளை சேகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், குடிநீர், கள்ளுக்கடை ஆகிய அம்சங்களும், மகளிர் உதவித்தொகை நிறுத்தம் போன்றவைகளும் இருக்குமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
