தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகத்தின் வருகை ஒரு மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது மாநாட்டிலும் பொதுக்கூட்டங்களிலும் பாஜக மற்றும் அதிமுக குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
அரசியல் விமர்சகர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் பலரும், “விஜய் ஏன் பாஜகவின் பெயரை சொல்ல பயப்படுகிறார்? அதிமுகவை அவர் ஏன் விமர்சிக்கவே இல்லை?” போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். ஒரு கட்சியின் கொள்கை தலைவர்களை அறிவித்த போதே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக தான் இருப்பதை விஜய் உணர்த்திவிட்ட போதிலும், நேரடி தாக்குதல் இல்லை என்பதையே இவர்கள் ஒரு பெரிய குறையாக சித்தரித்து வருகின்றனர்.
இத்தகைய விமர்சனங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது மிக காரசாரமான பதிலடிகளை தந்து வருகின்றனர். குறிப்பாக, அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் ஊடகங்களில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் ‘பெய்டு நபர்கள்’ தான் இத்தகைய குழப்பங்களை விளைவிப்பதாக தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
விஜய் யாரை பற்றி பேச வேண்டும், யாரை பற்றி பேசக்கூடாது, யாரை எதிரியாக கருத வேண்டும் என்று கட்டளையிட இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் தவெகவினரின் பிரதான கேள்வியாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவருக்கு தனது அரசியல் எதிரியை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் உண்டு என்பதை இவர்கள் உணர வேண்டும் என்று அக்கட்சியினர் சாடுகின்றனர்.
நடக்கவிருப்பது 2026 சட்டமன்ற தேர்தல் என்பதைச் சுட்டிக்காட்டும் தவெக நிர்வாகிகள், தமிழகத்தில் தற்போது பிரதான அதிகாரத்தில் இருப்பது திமுக மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகின்றனர். மக்களிடம் அதிகாரத்தில் இருப்பவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி, ஆட்சியை பிடிக்க நினைப்பதுதான் ஒரு புதிய கட்சியின் இயல்பான யுக்தி. தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழ் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அல்லது மிக குறைந்த செல்வாக்குடன் இருக்கும் பாஜகவை விமர்சிப்பதில் நேரத்தை செலவிடுவது தேவையற்றது என்பது தவெகவின் நிலைப்பாடாக தெரிகிறது. எதற்கெடுத்தாலும் பாஜகவை இழுத்து பேசி, அதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற நினைக்கும் வழக்கமான ‘திராவிட மாடல்’ அரசியலை விஜய் செய்ய விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதிமுக குறித்த விமர்சனம் ஏன் இல்லை என்ற கேள்விக்கு, அதிமுக தற்போது ஆட்சியில் இல்லை என்பதுதான் மிக எளிமையான பதில். ஒரு புதிய கட்சி தனது போராட்டத்தை ஆளும் தரப்பிற்கு எதிராக தான் தொடங்க வேண்டுமே தவிர, ஏற்கனவே ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை தாக்கி என்ன பயன் விளைய போகிறது என்று தவெகவினர் கேட்கின்றனர். மேலும், அதிமுகவின் வாக்கு வங்கி விஜய்யின் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படும் சூழலில், தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து அந்த வாக்காளர்களை தூர விலக்க விஜய் விரும்பவில்லை என்பதும் ஒரு நுணுக்கமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.
விமர்சனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும், தவெகவின் வளர்ச்சி அவர்களை பதற்றமடைய செய்திருப்பதே இத்தகைய புலம்பல்களுக்கு காரணம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர். மற்ற கட்சிகள் எழுதி வைத்த திரைக்கதையின் படி விஜய் அரசியல் செய்ய மாட்டார் என்றும், தனக்கான பாதையை அவரே தீர்மானிப்பார் என்றும் அவர்கள் உறுதிபட கூறுகின்றனர். பாஜகவை பற்றி பேசாதது பயத்தினால் அல்ல, மாறாக அவர்களை ஒரு அரசியல் பொருட்டாகவே விஜய் மதிக்கவில்லை என்பதால்தான் என்று அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தமிழக அரசியலில் தேவையற்ற பயங்கரத்தை உருவாக்கி அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் யுக்தி விஜய்யிடம் இல்லை என்பது இதில் தெளிவாகிறது.
இறுதியாக, தமிழக வெற்றி கழகம் என்பது ஒரு மாற்றிற்கான அரசியல் இயக்கமே தவிர, மற்ற கட்சிகளின் ஊதுகுழலாக செயல்படும் அமைப்பு அல்ல. மக்களின் அன்றாட பிரச்சினைகள், ஊழல் ஒழிப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை முன்னிறுத்தி தான் விஜய் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதில் யார் எதிரி, யார் நண்பன் என்பதை அவர் தனது தேர்தல் வியூகங்களுக்கு ஏற்ப முடிவு செய்வார்.
2026-ல் சென் ஜார்ஜ் கோட்டையை கைப்பற்றுவதே இலக்கு என்பதால், அதற்கு தடையாக இருக்கும் ஆளுங்கட்சியை தான் விஜய் குறிவைப்பார். இதை சகித்து கொள்ள முடியாதவர்கள் தான் ‘பாஜவை ஏன் எதிர்க்கவில்லை’ என்ற பழைய பல்லவியை பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி தவெகவினர் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
