தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் தொழில் நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் தங்களது சொந்த ஊரில் இருந்து தலைநகர் சென்னையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மேலும் அளவுக்கதிமான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் மக்கள் சொந்த ஊர் செல்ல வேண்டுமானால் ஒரு பெரிய போராட்டமாகவே உள்ளது. ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் உடனுக்குடன் தீர்ந்து விடுவதால் அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி பஸ் போக்குவரத்து தான்.
எத்தனை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அதிலும் அதிக அளவில் மக்கள் பயணிப்பதால் பலர் பஸ் நிலையத்திலேயே காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றி சென்னை நகருக்குள் செல்லும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தனர்.
கடும் பஞ்சத்திற்கு இரையாகப் போகும் யானைக் கூட்டம்.. கொத்து கொத்தாக கொல்லப் போகும் ஜிம்பாவே அரசு..
இந்நிலையில் பொங்கல், தீபாவளி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் பொருட்டு வழக்கமாக இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், சிறப்பு பேருந்துகளை விட கூடுதலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. வழக்கமாக கிராமப் பகுதிகளில் இயங்கும் பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக மாற்றுவதால் கிராமப்புற மக்களும் பஸ் வசதியின்றி தவிக்கின்றனர்.
இதனால் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து அதற்கான ஓட்டுநர், நடத்துனரை அரசுப் போக்குவரத்துக்கழக பணியாளர்களை வைத்தே இயக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து குறிப்பிட்ட ஊருக்கு எத்தனை நடை சென்று வந்திருக்கிறது என்று கணக்கிட்டு அதற்கேற்றவாறு வாடகை அளிக்கப்பட உள்ளது. இந்த முடிவால் பயணிகளும் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லலாம். மேலும் கிராமப்புற மக்களும் பாதிப்பின்றி அவர்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும். இந்த நடைமுறை தற்போது ஆலோசனையில் உள்ளது. விரைவில் இது அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.