ரூ.50000 தரும் தமிழ்நாடு அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. சூப்பர் அறிவிப்பு

By Keerthana

Published:

தேனி: தேனி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ள அரசு அழைப்பது வழக்கம். அந்த வகையில் 50000 பிளஸ் வட்டி தொகையுடன் பணத்தைபெறுவதற்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “சமூக நலத்துறை முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளுக்கான வைப்புத் தொகையை அரசு செலுத்தும். குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் முதிர்வுத்தொகையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில், தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, வைப்புத்தொகை ரசீது பெறப்பட்ட பயனாளிகளில், முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இத்தொகை பெற தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரசீது நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் (சான்றொப்பமிடப்பட்டது), வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தேனி மாவட்டம் என்று இல்லை.. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு 2-வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான டெபாசிட் பத்திரம் அரசால் தரப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் அரசால் தரப்படுகிறது. முதலில் பெண் குழந்தை பிறந்து 2-வது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கு 3 டெபாசிட் பத்திரங்கள் அரசால் வழங்கப்படுகிறது.இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது தேவையான ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம். 50000 என்பது கண்டிப்பாக லட்சத்தை தாண்டி இருக்கும். எனவே கணிசமான தொகை பெண்களுக்கு கிடைக்கும்.