தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு ஒரு புதிய அரசியல் சவாலை எதிர்கொண்டு வருகிறார். இந்த சம்பவம், திரையுலகத்திலிருந்து அரசியல் களத்திற்கு வந்த அவரை, “திரும்பிப் போய் நடிப்பு தொழிலைப் பாருங்கள், அரசியல் அவ்வளவு எளிதல்ல” என்று விமர்சிக்கவும், அச்சுறுத்தவும் ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது. “இது வெறும் ட்ரெய்லர் தான், இன்னும் பயங்கரமாக இருக்கும்” என்று விஜய், அரசியல் விமர்சகர்களால் எச்சரிக்கப்பட்டிருப்பது, அவரது அரசியல் எதிர்காலத்தை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளது.
விஜய் எதிர்கொள்வது வெறும் அரசியல் போட்டியாளர்களை மட்டுமல்ல, அதிகார பலம் கொண்ட ஒரு ஆளுங்கட்சியை. அதுவும் ஒரே நேரத்தில் மத்திய அரசையும் மாநில அரசையும் ஒரு புதிய கட்சி எதிர்ப்பது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. தமிழக அரசியல் என்பது எப்போதும் கடினமான ஒரு களம்தான். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற வலுவான ஆளுமைகள் மட்டுமே இங்கு நீடித்திருக்க முடியும். அவர்களுக்கு பிறகு, கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது, அவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்காமல் திராவிட கட்சிகளிடம் சரண் அடைந்தனர். இப்போது விஜய், அவர்களையெல்லாம் தாண்டிய ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறார்.
“நீங்கள் மோதுவது சாதாரண எதிரியிடம் இல்லை” என்று சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் விஜய்க்கு மறைமுகமான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில், விஜய் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் முன்புபோல எளிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கோ அல்லது சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கோ வாய்ப்புகள் குறைவு. அவரிடம் இரண்டு முக்கிய வழிகள் மட்டுமே உள்ளன:
ஒன்று துணிச்சலுடன் அரசியலில் தொடர்வது: இந்த அச்சுறுத்தல்களை புறக்கணித்து, தனது அரசியல் பயணத்தை தொடர விஜய் முடிவு செய்தால், அவர் மிகவும் உறுதியான ஒரு தலைவராக உருவெடுக்க முடியும். ஆனால், இதற்கு அவருக்கு பின்னால் ஒரு வலுவான தொண்டர் படை மற்றும் சட்ட வல்லுநர்கள் தேவை. இந்த சவால்களை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறாரா? அவரது குடும்பம் இதற்கு சம்மதிக்குமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.
இரண்டு அரசியலை விட்டு மீண்டும் நடிப்புக்கு திரும்புவது: இந்த நெருக்கடிகள் தாங்க முடியாதவையாக இருந்தால், அவர் மீண்டும் நடிப்பு துறைக்கே திரும்பிவிடலாம். இது அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். ரஜினி இதையெல்லாம் யோசித்து தான் பின்வாங்கினார். ரஜினியை கோழை என்று திட்டியது போல் விஜய்யையும் பலர் திட்டலாம். ஆனால் ரஜினி எடுத்த முடிவு சரியானது என இப்போது எல்லோரும் புரிந்து கொண்டது போல் விஜய்யையும் அவரது ரசிகர்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள். ஆனால், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கு ஒரு பாதுகாப்பான வழியாக இருக்கலாம். ஒரு அரசியல் தலைவராக அல்லாமல், ஒரு நடிகராக அவர் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.
மொத்தத்தில் இது ட்ரெய்லர் தான் என்ற அச்சுறுத்தல் விஜய்க்கு ஒரு கடுமையான பாடம். அவர் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல. அவர் தனது அரசியல் பயணத்தை தொடர வேண்டுமா அல்லது திரும்புவதா என்பதை இந்த சம்பவம் தீர்மானிக்கும். விஜய்யின் முடிவு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
