ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை.. வெடித்த விசிக எம்பி.. பெரும் விவாதம்

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றவேண்டும் என கிறிஸ்துதாஸ் காந்தி பேசியதற்கு பதில் அளித்துள்ள விசிக எம்பி ரவிக்குமார், ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை. அது ஒரு சாதி கடந்த அடையாளம் என்று கூறியதுடன், அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

விசிக எம்பி ரவிக்குமார் கூறுகையில், “தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரை மாற்றவேண்டும் என கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் கூறிவருகிறார். ஆதி திராவிடர் என்ற பெயர் எப்படி வந்தது என்ற வரலாற்றை அறியாமல் அல்லது அதை மறுத்துப் பேசும் பேச்சு இது. ஆதி திராவிடர் என ஒரு சாதி தமிழ்நாட்டில் இருந்ததில்லை. அது ஒரு சாதி கடந்த அடையாளம்.

தேவேந்திர குல வேளாளர் என்பதும் ஒரு சாதிப் பெயர் அல்ல. 2011 சென்சஸ் பட்டியலில் தேவேந்திர குலத்தான் என்றுதான் இருக்கிறது. 1921 சென்சஸுக்கு க்கு முன் அருந்ததியர் என்றும் ஒரு சாதி இருக்கவில்லை. ஆதி திராவிடர் என்ற பெயரை எம்.சி.ராஜா முதலான தலைவர்கள் முன்மொழிந்தபோது அதற்குப் போட்டியாக சக்கிலியர் சமூகத்தவரால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட பெயர்தான் அருந்ததியர். 1911, 1931 சென்சஸ் ஆவணங்களைப் பார்த்தால் அதைப் புரிந்துகொள்ளலாம். சென்னை மாகாணத்தில் இருந்த ஆந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டது ஆதி ஆந்திரர்கள் என்ற பெயர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதி திராவிடர் என்ற பெயரை சக்கிலியர் சமூகத்தினரோ, தேவேந்திரகுலத்தார்களோ ஏற்கவில்லை. அதன் தொடர்ச்சிதான் கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களின் ஒவ்வாமை. ஆதி திராவிடர் என்ற பெயர் எஸ்சி பட்டியலில் 1931 சென்சஸ் முதல் இடம்பெற்றுள்ளது ,உண்மைதான். அது சாதியை ஏற்றுக்கொண்டவர்களின் பெயரல்ல, சாதியை மறுத்தவர்களின் பெயர். சாதி ஒழிப்பைப் பேசுகிறவர்கள் அதை ஏற்கிறார்கள். சாதிப் பெருமையைப் பேசுகிறவர்கள் அதை எதிர்க்கிறார்கள்.

ஆதிதிராவிடர் என்ற பெயரை அந்தத் துறையின் பெயரிலிருந்து நீக்குவதற்கு முன் நீதிக் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட அரசாணை எண் : 817 நாள் 25.03.1922 இன் படி எஸ்சி பட்டியலில் பறையர், பஞ்சமர் என்ற பெயர்கள் நீக்கப்பட வேண்டும். 2011 சென்சஸில் பஞ்சமா என்ற பெயரில் தமிழ்நாட்டில் மொத்தமே 57 பேர்தான் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு சாதியாக ஏன் பட்டியலில் வைத்திருக்க வேண்டும்?

அருந்ததியர் (7 சாதிகள்) தேவேந்திரகுல வேளாளர் (7 சாதிகள்) என்பவை இரண்டு தொகுப்புகளாக இன்று சட்டப்படி உருவாகிவிட்டன. கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஏற்றாலும் மறுத்தாலும் அதுதான் யதார்த்தம். அந்த 14 சாதிகள் போக மீதமுள்ள சாதிகளை ஆதிதிராவிடர் என ஒரே பெயரில் அறிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துகிறோம். அதற்கு திரு கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் முதலில் ஆதரவு தெரிவிக்கட்டும்” இவ்வாறு கூறினார்.