தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கப்போகும் ஒவ்வொரு நகர்வும் மற்ற அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விஜய் பொதுவெளியில் அடிக்கடி அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், திரைமறைவில் தேர்தல் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகிறார் என்பது நிமித்தம். முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பிரச்சனைகளை பொறுத்தவரை, தற்போதைய திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அதை தனது தேர்தல் பரப்புரைக்கான முக்கிய ஆயுதமாக விஜய் கையில் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் உத்திகள் அமைதியாகவும் கமுக்கமாகவும் திட்டமிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆன்லைன் மூலமாக போட்டியிட விரும்புவோரின் விவரங்களை சேகரிக்கும் பணியையும் விஜய் தொடங்கிவிட்டார். திமுக மற்றும் அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளே இன்னும் வேட்பாளர் நேர்காணலை தொடங்காத நிலையில், ஒரு புதிய கட்சியாக தவெக இவ்வளவு வேகமாகக் களம் காண்பது மற்றவர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் தங்களின் வாக்குறுதிகளை அறிவிப்பதன் மூலம், மற்ற கட்சிகள் அதனை ‘காப்பி’ செய்வதை தவிர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டணி அரசியலை பொறுத்தவரை, ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் நட்புறவு ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் மீது ஒரு மென்மையான போக்கை கடைப்பிடித்து வரும் விஜய், இதுவரை அந்த கட்சியை எந்த இடத்திலும் விமர்சனம் செய்ததில்லை. ‘மதவாதம்’ என்பதை தனது சித்தாந்த பகையாக அறிவித்துள்ள விஜய், மதச்சார்பற்ற கொள்கையுடைய காங்கிரஸ் போன்ற கட்சிகளை தனது பக்கம் இழுக்க விரும்புவது இயல்பானதே. மறுபுறம், திமுக கூட்டணியில் அதிகார பங்கீடு மற்றும் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தவெக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உளவுத்துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, விஜய்க்கு சுமார் 22 முதல் 23 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக தெரிகிறது. இது திமுகவை மட்டுமல்லாமல், அதிமுக மற்றும் பாஜகவின் வாக்குகளையும் சரிசமமாக பிரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விஜய் களம் இறங்குவது திமுகவின் வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்று நினைத்த அமித்ஷா போன்ற தலைவர்கள், தற்போது அவர் அனைத்து கட்சிகளின் வாக்கு வங்கியையும் சரிப்பதாக வந்த தகவலால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் விஜய்யுடன் இணைந்தால், அது ஒரு வெற்று கூட்டணியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாஜகவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காங்கிரஸும் தவெகவும் சேர்வது ஒரு பலமான அடித்தளமாக அமையும். அதேபோல், திருமாவளவன் போன்ற தலைவர்கள் பாமகவின் வருகையை திமுக கூட்டணியில் விரும்பாத நிலையில், அவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக தவெக இருக்கும். விஜய்யும் துணை முதல்வர் போன்ற பதவிகளை விசிகவுக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் காலத்தை போலவே, விஜய் என்ற ஒரு தனிமனிதரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்ற பிம்பம் தற்போது உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர் நிறுத்தும் வேட்பாளர் யாராக இருந்தாலும் மக்கள் அவருக்கு வாக்களித்தது போல, 234 தொகுதிகளிலும் விஜய்யே நிற்பதாக கருதி மக்கள் வாக்கு செலுத்தும் சூழல் நிலவுகிறது.
இறுதியாக, வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் தமிழகத்தின் தேர்தல் கூட்டணி கணக்குகள் ஒரு முழு வடிவம் பெற்றுவிடும். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் வரக்கூடும் என்பதால், ஜனவரி இறுதிக்குள் அனைத்து கட்சிகளும் தங்களின் பலத்தை பொதுவெளியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விஜய்யின் மௌனம் என்பது ஒரு பெரிய சூறாவளிக்கான அறிகுறியாகவே தெரிகிறது. அவர் எப்போது களம் இறங்கினாலும், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி. 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, அது தமிழகத்தின் புதிய அரசியல் தலைமையை நிர்ணயிக்கும் தேர்தலாகவும் அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
