தமிழக அரசியல் வரலாற்றில் 1977-ல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகு, ஒரு நட்சத்திர நடிகரின் வருகை இத்தனை பெரிய அதிர்வலைகளை உருவாக்குவது இதுவே முதல்முறை. 2026 சட்டமன்ற தேர்தலை ஒரு “தனித்துவமான தேர்தல்” என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முந்தைய தேர்தல்களில் நாம் பார்த்த “இருமுனைப் போட்டி” என்பது மறைந்து, தற்போது ஒரு பலமுனை போட்டி உருவாகியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், களத்திற்கு வந்தவுடன் எஸ்டாப்ளிஷ் செய்யப்பட்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தேர்தல் வியூகங்களை அடிமட்டத்திலிருந்து மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
விஜய்யின் பலம் என்பது வெறும் ரசிகர் மன்றம் சார்ந்தது மட்டுமல்ல; அது Gen-Z இளைஞர்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பெரும் வாக்கு வங்கிகளை நோக்கி நகர்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட பல பெண்கள் விஜய்யை ஒரு நடிகராக பார்க்காமல், தங்கள் குடும்ப உறுப்பினராக, ஒரு தம்பியாக பார்க்கும் எமோஷனல் கனெக்ட் அவரிடம் உள்ளது. இந்த உணர்வுபூர்வமான பிணைப்பை உடைப்பது மற்ற அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய 9% தாக்கத்தை விட, விஜய்யின் தாக்கம் இருமடங்காக, அதாவது 15% முதல் 20% வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அவரை மாற்றும்.
தமிழக ஆளும் கட்சியான திமுக, விஜய்யின் வருகையை தொடர்ந்து தனது அணுகுமுறையில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக, “வைப் வித் எம்.கே.எஸ்” போன்ற பிரச்சாரங்கள் மூலம் இளைஞர்களை கவர முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். மேலும், பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் கோடைக்கால நிவாரண நிதி போன்ற அறிவிப்புகள், விஜய்க்கு போகக்கூடிய பெண் வாக்குகளை தக்கவைப்பதற்கான ஒரு தற்காப்பு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. திமுக தனது நீண்டகால கொள்கை அரசியலை தாண்டி, தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் மற்றும் உடனடி சலுகைகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.
மறுபுறம், விஜய்யின் அரசியல் இன்னும் முழுமையாக களத்தில் இறங்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. அவர் வெறும் மேடைகளில் பேசுவதுடன் நின்றுவிடாமல், மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக, குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் போன்ற விஷயங்களில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காவல்துறையினரின் கஸ்டடி மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒருங்கிணைத்தது போன்ற பணிகளை அவர் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அவர் ஒரு “மேன் ஆஃப் தி மேட்ச்” ஆக ஒரு தேர்தலில் மட்டும் மின்ன போகிறாரா அல்லது “மேன் ஆஃப் தி சீரிஸ்” ஆக தொடர்ந்து நிலைக்கப் போகிறாரா என்பது அவர் எடுக்கும் கள முடிவுகளிலேயே உள்ளது.
கூட்டணி அரசியலை பொறுத்தவரை, விஜய் தற்போது தனித்து போட்டியிடும் முடிவிலேயே உறுதியாக இருக்கிறார். விஜயகாந்த் தனது வீழ்ச்சியின் தொடக்கத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது போன்ற ஒரு தவறை விஜய் செய்ய கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஒருவேளை 20% வாக்குகளை அவர் பெற்றால், அடுத்த தேர்தலில் மற்ற கட்சிகளே அவர் வீட்டு வாசலில் வந்து நிற்கும் சூழல் உருவாகும். மேலும், அதிகார பகிர்வு என்ற புதிய ஆயுதத்தை அவர் கையில் எடுத்திருப்பது, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தலுக்கு பிந்தைய அமைச்சரவையில் மாற்றங்களை கோரும் நிலையை உருவாக்கும்.
முடிவாக, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; அது தமிழகத்தின் “மூன்றாவது பெரும் சக்தி யார் என்பதைத் தீர்மானிக்கும் போர்க்களம். அதிமுகவின் பலவீனம் விஜய்க்கு ஒரு சாதகமான களத்தை அமைத்து கொடுத்திருந்தாலும், திமுகவின் பலமான கட்டமைப்பை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஊழல் எதிர்ப்பு, நெப்போட்டிசம் ஒழிப்பு போன்ற முழக்கங்களுடன் வரும் விஜய், மக்களிடம் தெளிவான ஒரு விஷனை முன்வைக்க வேண்டும். ஒரு மிக நெருக்கமான போட்டி காத்திருக்கும் நிலையில், மக்கள் அளிக்கும் தீர்ப்பு தமிழக அரசியலின் அடுத்த 50 ஆண்டுகளை தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
