கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…

The man who broke into a house in Kanyakumari and stole jewelery and money left it at the door

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியை சேர்ந்த 68 வயதாகும் நீலகண்ட பிள்ள,. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியாவார். இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் சுஜி. சுஜிக்கு திருமணமாகி கோவையில் வசித்து வருகிறார்.

நீலகண்ட பிள்ள வீட்டில் பராமரிப்பு பணி முடிந்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு தான் குடும்பத்தினருடன் பால் காய்ச்சி குடியேறினார். பின்னர் மனைவியுடன் நீலகண்ட பிள்ளை கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். அதே சமயத்தில் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவரிடம் நீலகண்ட பிள்ளை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் நேற்று காலையில் நீலகண்டபிள்ளை வீட்டுக்கு சென்ற போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் பதற்றத்துடன் உள்ளே சென்று பார்த்த போது கீழ்தளத்தில் உள்ள கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டும், மாடியில் உள்ள கதவு திறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.

மாடியில் படுக்கை அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறையில் உள்ள டிராயர் வெளியே கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து நகை, பணத்தை திருடியது உறுதியானது. இதற்கிடையே கீழ் தளத்தில் வீட்டின் வாசல் முன்பு ஒரு கவரில் (பாலித்தீன் பை)திருடிய நகையும், பணமும் இருந்தது.

இதுகுறித்து அந்த நபர் நீலகண்ட பிள்ளைக்கும், ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் வீட்டின் உரிமையாளர் நீலகண்ட பிள்ளையிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ரூ.90 ஆயிரம், ஒரு ஜோடி தங்க கம்மல் இருந்ததாகவும் மற்றபடி இருந்தது கவரிங் நகை என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த மர்ம ஆசாமியின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் நகை கிடந்த கவரை பிரித்து பார்த்த போது வீட்டின் உரிமையாளர் கூறியபடி அதில் ரூ.90 ஆயிரம், ஒரு ஜோடி கம்மல் இருந்தது. அதனை போலீசார் மீட்டார்கள். நீலகண்ட பிள்ளை வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்மஆசாமி மாடியில் புகுந்து படுக்கை அறையில் கைவரிசை காட்டியதும், கதவை சாவியால் பூட்டி விட்டு அதனை எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் தப்பி செல்லும் போது நகை, பணத்தை ஒரு கவரில் பொதிந்து எடுத்துச் சென்ற போது அது தவறி கீழே விழுந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும் நகை, பணத்தை திருடியவர் முதன் முறையாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. நகை, பணத்தை திருடிய பிறகு ஆசாமி திடீரென மனம் திருந்தியிருக்கலாம் என்றும், பிறகு அங்கேயே நகை, பணத்தை வாசலிலேயே விட்டு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் நம்புகிறார்கள். அதே சமயத்தில் மாடியில் இருந்து தெரு வரை மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. திருடிய ஆசாமி யாரென்று கண்டுபிடிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்த கொள்ளையன் இதுபோன்று ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த திருட்டில் துப்பு துலக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம ஆசாமிகள் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் ஆய்வு நடந்து வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.