தமிழக அரசியலில் தற்போது எங்கு திரும்பினாலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குறித்த விவாதங்கள் தான் அனல் பறக்கின்றன. குறிப்பாக, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, “இப்போதைக்கு கூட்டணிக்கு வர முடியாது” என்ற தெளிவான முடிவை தவெக தரப்பு டெல்லி மேலிடத்திற்கு தெரிவித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதால், தேர்தலுக்கு முன் பாஜகவுடன் கைகோர்ப்பது தற்கொலைக்கு சமம் என்றும், அது ஆளுங்கட்சியான திமுகவிற்கே சாதகமாக முடியும் என்றும் விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால், “தேர்தலுக்கு பின் நிலமையை சந்திப்போம்” என்ற ரகசிய தூது அமித்ஷாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், அதற்கு டெல்லி தரப்பில் ஒரு ‘மென்மையான’ பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு பிறகு இந்த விவகாரம் இன்னும் சூடுபிடித்துள்ளது. சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், விஜய் தரப்பு மிகவும் நிதானமாகவும், அதேசமயம் அழுத்தமாகவும் தனது தரப்பு நியாயங்களை முன்வைத்துள்ளது. “சிபிஐ விசாரணை ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்புமா?” என்ற கேள்விக்கு விடையாக, பேரணிக்கு அனுமதி கொடுத்ததில் இருந்த குளறுபடிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை தவெக வழக்கறிஞர்கள் அடுக்க தொடங்கியுள்ளனர். இந்த விசாரணை வளையத்திற்குள் அரசு அதிகாரிகளும் இழுக்கப்படலாம் என்பதால், வரும் நாட்களில் அரசியல் களத்தில் ஒரு பெரிய நிலநடுக்கத்தை எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையில், தணிக்கை வாரிய சிக்கலில் தவித்து கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதே லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போதைய தகவல்களின்படி, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் படத்திற்கான சிக்கல்கள் ஓரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, அதாவது மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் வெறும் பொழுதுபோக்குத் திரைப்படமாக இல்லாமல், ஒரு வலுவான அரசியல் தேர்தல் அறிக்கையாகவே இருக்கும் என்பதால், இதன் ரிலீஸ் ஆளுங்கட்சிக்கு நிச்சயம் ஒரு சவாலாகவே அமையும்.
விஜய் தரப்பின் தற்போதைய மௌனம் ஒரு மிக பெரிய புயலுக்கான முன்னேற்பாடு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். “அதிரடி ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம்” என்பதை நிரூபிக்கும் வகையில், சிபிஐ விசாரணையை தொடர்ந்து விஜய் தமிழகம் தழுவிய ஒரு மாபெரும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த முறை மாவட்ட ரீதியான கூட்டங்கள் மட்டுமல்லாமல், தொகுதி வாரியான ரகசிய வியூகங்களையும் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான குழு வகுத்துள்ளது. பாஜகவை மறைமுகமாக ஆதரிப்பதாக கிளம்பும் விமர்சனங்களை முறியடிக்க, பாஜகவின் சில கொள்கைகளையும், திமுகவின் ஊழல்களையும் ஒருசேரத் தாக்கும் புதிய பாணியை விஜய் கையில் எடுக்கப் போகிறார்.
சிபிஐ விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய்யின் முகத்தில் தெரிந்த ஒருவிதமான ‘நிம்மதியான புன்னகை’ பல அர்த்தங்களை சொல்கிறது. 2026 தேர்தலில் திமுகவிற்கு எதிராக அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், அதிமுக – பாஜக கூட்டணியில் நேரடியாக இணையாமல், ஒரு ‘தனித்தன்மை’ கொண்ட மூன்றாவது அணியாகவோ அல்லது தேர்தலுக்கு பிந்தைய ஆதரவாளராகவோ தன்னை நிலைநிறுத்தி கொள்ள அவர் விரும்புகிறார். அமித்ஷாவுடன் எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் அந்த ‘ரகசிய உடன்படிக்கை’ ஒருவேளை உண்மையாக இருந்தால், அது தேர்தலுக்கு பின் தமிழக அரசியலில் ஒரு புது வகை அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுக்கும்.
இனிவரும் நாட்கள் விஜய்க்கும் அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மிக முக்கியமானவை. ஒருபுறம் சிபிஐயின் சட்ட போராட்டங்கள், மறுபுறம் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு, இன்னொரு புறம் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் என முக்கோண போட்டியில் விஜய் சிக்கியிருக்கிறார். ஆனால், இந்த நெருக்கடிகள் அனைத்தையும் தனக்கு சாதகமான ‘அனுதாப அலையாக’ மாற்றும் வித்தையை அவர் நன்கு அறிந்திருக்கிறார். கரூர் விபத்து முதல் சிபிஐ விசாரணை வரை அனைத்தையும் மக்கள் மன்றத்தில் வைத்து, தற்போதைய அரசுக்கு ஒரு வலுவான நெருக்கடியை கொடுக்க விஜய் தயாராகிவிட்டார். ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
