சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனால்ஆத்திரம் அடைந்த பிரியாணி கடை உரிமையாளர் அப்பு, பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் அப்பு என்பவர் தனது பெயரில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் ஏராளமான வீடியோக்களை அவர் பதிவு செய்தார். அந்த கடையில் சுவை பலருக்கும் பிடித்து போனதால், அப்பு கடை பிரியாணியை சாப்பிட வாடிக்கையாளர்கள் படையெடுத்தனர்.
இதன் மூலம் சமூக வலைதளங்களில் அப்பு கடை பிரியாணி மிகவும் பிரபலமானது. தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அப்பு கடையின் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அண்மைக்காலமாக அப்பு கடையின் பிரியாணி, தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. வாடிக்கையாளர்களும் அப்பு கடை பிரியாணி மீது அதிருப்தி தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
இதையடுத்து புகார்களின் அடிப்படையில் திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சென்றார்கள். அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுகாதாரமின்றி பிரியாணி சமைத்ததாக கூறி, சமையல் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள்..
இதனால் ஆத்திரமடைந்த பிரபல அப்பு பிரியாணி கடை உரிமையாளர் அப்பு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.