அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது, தனது முகத்தை கர்சீஃபால் மறைத்து சென்றதாக எழுந்த சர்ச்சை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் தனது பார்வையைத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர் சந்திப்பில் தான் முகத்தை மறைக்கவில்லை என்றும், வியர்வையை துடைத்ததாகவும் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட தராசு ஷ்யாம், அரசியல் தலைவர்களுக்கு உடலியல் மொழி மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார். “அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கூட ஜோ பைடனின் உடலியல் மொழிதான் அவரது விலகலுக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. அதேபோல், எடப்பாடியின் செயலும் ஒருவித அரசியல் குறியீடாக பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் வரலாற்றை நினைவூட்டிய தராசு ஷ்யாம், அப்போது மத்திய அரசின் தலைவர்கள் தமிழகத்திற்கு வந்துதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், மாநில கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு சென்று காத்திருந்ததில்லை என்றும் குறிப்பிட்டார். ஜெயலலிதா “மோடியா? லேடியா?” என்று கேட்டதையும், வாஜ்பாய் அரசின் தூதுவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க காத்திருந்ததையும் அவர் எடுத்துக்காட்டாக கூறினார்.
ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்தித்தது, “அதிமுக மீண்டும் டெல்லியின் மேலாண்மையை ஏற்றுக்கொள்கிறதா?” என்ற கேள்வியை எழுப்புவதாகவும், இது தமிழக அரசியலின் நீண்டகால நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும் அவர் கூறினார்.
“அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது” என்று அமித்ஷா கூறியதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்தும் ஷ்யாம் விமர்சித்தார். “உட்கட்சி விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று நாம் தான் சொல்ல வேண்டும். அமித்ஷாவே அப்படிச் சொல்கிறார் என்றால், அதுவே பாஜகவின் தலையீடு தொடர்ந்து இருந்திருக்கிறது என்பதற்கான பலவீனம் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் விவகாரங்களில் பாஜக தலையிட்டதுதான் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்றும், ஆட்சிக்கு எதிரான எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது, ஆளுநரின் மெஜாரிட்டி நிரூபிக்க நோட்டீஸ் அனுப்பாதது போன்ற நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
“பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க முடியாது, நான் யாருடனும் சமரசம் செய்ய மாட்டேன்” என்ற எடப்பாடி பழனிசாமியின் உறுதியான நிலைப்பாடு, பாஜகவின் முயற்சிகளை முறியடித்ததாக கூறப்பட்டாலும், அவர் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதன் மூலம் ஒரு சமரசத்திற்கு தயாராகவே இருக்கிறார் என்று ஷ்யாம் தெரிவித்தார்.
மேலும், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றோரை சேர்ப்பதன் மூலம் வாக்குகள் சிதறாமல் பாதுகாக்கலாம் என்று பாஜக கருதினாலும், எடப்பாடி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், வரும் தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறி, மூன்றாவது அணிக்கு அதாவது விஜய் கட்சி, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒருவேளை நிக்கப்பட்டால் அவரும் சேர்ந்து கூட்டணி வைத்தால் அந்த கூட்டணிக்கு லாபமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதிமுக தோற்றுப்போகும் வாய்ப்புகள் இருந்தாலும், அது ஒருபோதும் அழியாது என்று தராசு ஷ்யாம் உறுதியாகக் கூறினார். “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உழைப்பில் உருவான கட்சி இது. இரட்டை இலை சின்னத்தின் மகிமையும், திமுக எதிர்ப்பு வாக்குகளும் கட்சியை மீண்டும் நிலைநிறுத்தும்” என்று அவர் தெரிவித்தார்.
2026 தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் புதிய தலைவர்கள் உருவாவதற்கும், அதிமுகவில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
