தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், நீண்டகாலமாக அரசியலில் நிலைத்து நிற்கும் பாரம்பரிய கட்சிகளை நிலைகுலைய செய்திருக்கிறது. குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது வாக்கு வங்கியை தங்களின் கோட்டையாக கருதும் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , மதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளின் வாக்குகளை விஜய் ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுத்துக்கொண்டார் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.
இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு பெருமளவில் இருப்பதால், இந்த கட்சிகளின் வாக்கு வங்கியில் விஜய் ஒரு மிகப்பெரிய ‘கபளீகரம்’ செய்துவிட்டார் என்பதே உண்மை. இதன் காரணமாகவே, இன்று சித்தாந்த ரீதியாக முரண்பட்டு நிற்கும் கட்சிகள் கூட, விஜய்யை எதிர்ப்பதில் மட்டும் ஒரு புள்ளியில் இணைந்து அவரை தாக்கி வருகின்றன.
விஜய்யின் வருகை என்பது வெறும் சிறிய கட்சிகளுக்கு மட்டுமான அச்சுறுத்தல் அல்ல; அது திராவிட பெருங்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதத்திலும் மிகப்பெரிய ஓட்டையை போடும் என்பதில் சந்தேகமில்லை. காலம் காலமாக திராவிடக் கட்சிகளுக்கு வாக்களித்து வந்த குடும்பங்களில் உள்ள இளைஞர்கள், இன்று மாற்றத்தை நோக்கி விஜய்யின் பக்கம் நகர்வது அக்கூட்டணிகளுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. இந்த ஓட்டை எவ்வளவு பெரியது என்பதும், அது எந்த தரப்பு வாக்குகளை அதிகம் பாதிக்கும் என்பதும் தற்போது வரை யாருக்கும் தெரியாத ஒரு புரியாத மர்மமாகவே நீடிக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் பிரிக்கும் வாக்குகள், மற்ற வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக மாறப்போகிறது.
வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, விஜய்க்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பதை எந்தவொரு அரசியல் ஆய்வாளராலோ அல்லது துல்லியமான கருத்துக்கணிப்புகளாலோ கணிக்க முடியாது. தமிழக வெற்றி கழகத்தின் பலம் என்பது அமைதியான ஒரு நீரோட்டமாக அடிமட்டத்தில் வேலை செய்து வருகிறது. இது வெறும் சினிமா ரசிகர்களின் கூட்டம் மட்டுமல்ல, அரசியலில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கும் நடுநிலை வாக்காளர்களின் நம்பிக்கையாகவும் உருவெடுத்திருக்கிறது. இதனால் விஜய்யின் தவெக கட்சிக்கு கிடைக்கப்போகும் வாக்கு சதவீதம் என்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கலாம்.
தொகுதி வாரியாகப் பார்த்தால், தவெகவின் வெற்றி வாய்ப்புகள் என்பது மிகப்பரந்த அளவில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளுடன் வெற்றி நின்றுபோகவும் வாய்ப்பு, அதேபோல் மக்கள் மாற்றத்தை விரும்பி ஒரே பக்கம் திரும்பினால் 200 இடங்கள் வரை வெற்றி பெறவும் வாய்ப்பு என்றே கணிக்கப்படுகிறது.
ஒருபுறம் விஜய்யின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடும் விமர்சனங்கள் இருந்தாலும், கள நிலவரம் என்பது அவருக்கு சாதகமாகவே தெரிகிறது. எது எப்படியிருப்பினும், 2026 தேர்தல் முடிவுகள் என்பது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் மாற்று கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
