சென்னை: டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க நவம்பர் மாதம் முதல் ரசீது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டம் கோவை, சென்னையில் உள்ள 266 கடைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கண்ட கடைகளில் நவம்பர் மாதம் முதல் டிஜிட்டல் மூலம் மது விற்பனை நடைபெற இருக்கிறது
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் செய்யப்பட்ட மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு (2023-2024) ரூ.45 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.123 கோடியும், மாதத்துக்கு ரூ.3,698 கோடியும் மது விற்பனை மூலம் வரி வருவாய் கிடைக்கிறது.
ஆனால், கொரோனா காலத்துக்கு பிறகு கஞ்சா உள்ளிட்ட பிற போதை பொருட்களை பலர் நாட தொடங்கியதால் மது விற்பனை குறைந்து போனதாக கூறப்படுகிறது. அரசுக்கு லாபம் ஈட்டி தரும் டாஸ்மாக் நிறுவனம், பாட்டிலை விற்றுத்தர ஒரு ரூபாய் மட்டுமே அரசிடம் இருந்து வாங்குவதால், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள் . இந்த நிலையில், டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. இதற்காக புதிய முறை வரப்போகிறது.
இதன்படி மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்கவும், மது பாட்டில்கள் கொண்டுவரப்படும்போது போக்குவரத்தில் ஏற்படும் முறைகேட்டை தவிர்க்கவும், கடைகளில் இருப்பு நிலவரத்தை கண்காணிக்கவும் மது விற்பனையில் டிஜிட்டல் முறை கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம், தொழிற்சாலைகளில் மது உற்பத்தியாகி, பாட்டில்களில் அடைக்கப்பட்டு வெளியேறி, குடோன்களின் தங்கி, பின்னர் கடைகளுக்கு வந்து விற்பனையாகி மதுப்பிரியர்களின் கைகளில் சேர்வது வரை, அதாவது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து தரவுகளையும் கியூ-ஆர் கோடு மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 கடைகளிலும் இந்த டிஜிட்டல் வசதியை கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, பரிசார்த்த முறையில் கோவை வடக்கு, வடசென்னை ஆகிய இடங்களில் உள்ள 266 டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளிக்கு பிறகு, வரும் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது,தீபாவளிக்கு பின்னர் கோவை வடக்கில் உள்ள 166 கடைகளிலும், வடசென்னையில் உள்ள 100 கடைகளிலும் இந்த டிஜிட்டல் நடைமுறை கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த கடைகளுக்கு இணையதள வசதி உள்ளிட்டவற்றை செய்துகொடுக்க மத்திய அரசின் ரெயில் டெல் நிறுவனம் ரூ.294 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. தற்போது, கோவை வடக்கு, வடசென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இணையதளம் வசதி செய்து கொடுக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே இனி மது ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட உடனேயே, அதில் கியூ ஆர் கோடு அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதில், பாட்டிலில் மது அடைக்கப்பட்ட நாள், நேரம் டிஜிட்டல் முறையில் ஏற்றப்படும். பிறகு அது சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டது, அரசு குடோனுக்கு வந்தது, அங்கிருந்து கடைகளுக்கு சென்றது, பிறகு விற்பனை செய்யப்பட்டது என அனைத்து தகவல்களும் கணிணி வழியாக பதிவு செய்யப்படும். மதுப்பிரியர்கள் இந்த மது பாட்டில்களை வாங்கும்போது அவர்களுக்கு ரசீது வழங்கப்படும். இதனால், அவர்கள் கூடுதல் பணம் கொடுக்க தேவையில்லை. பணத்தையும் ஜிபே மூலம் எளிதாக செலுத்தலாம். மது பாட்டில்களை வாங்கிய பிறகு, அதில் உள்ள கியூ-ஆர் கோடினை செல்போனில் ஸ்கேன் செய்து பார்த்தால் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
அதே நேரத்தில், மதுக்கடைகளில் உள்ள ஊழியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளார்கள்,. இந்த டிஜிட்டல் நடைமுறையால், நீண்டகாலமாக உள்ள பிரச்னைய்ன பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் நம்புகிறது. அதேநேரம் அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், பணி பாதுகாப்பும அளிக்கும் பட்சத்தில், நிச்சயம் கூடுதல் கட்டணம் வாங்குவது அடியோடு நின்றுவிடும். அதேநேரம் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர் அன்றே பணி நீக்கம் என்ற உத்தரவை பிறப்பித்தால், உடனே நின்றுவிடும். இதை அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.