தமிழகம், கேரளா, புதுவையில் கூட்டணி ஆட்சி.. 2029 தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியிலும் தவெகவுக்கு ஆட்சியில் பங்கு.. விஜய்யிடம் டீலிங் பேசிய பிரவீண் சக்கரவர்த்தி? தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறதா தவெக? கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் இவ்வளவு பெரிய வளர்ச்சியா? ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!

தமிழக அரசியல் களத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய அளவிலான கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான…

vijay praveen

தமிழக அரசியல் களத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேசிய அளவிலான கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அகில இந்திய தொழில் வல்லுநர் காங்கிரஸ் தலைவருமான பிரவீண் சக்கரவர்த்தி, த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்தபோது, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைப்பது மற்றும் 2029 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் மத்தியில் த.வெ.க.வுக்கு ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரவீண் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சியின் தகவல் மற்றும் தரவு பிரிவின் தலைவராகவும், அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவராகவும் கருதப்படுகிறார். அவர் விஜய்யை சந்தித்ததன் நோக்கம் குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் குழப்பங்கள் நிலவினாலும், த.வெ.க. வட்டாரங்கள் சில முக்கிய தகவல்களை தற்போது கசியவிட்டுள்ளன. அதன்படி, த.வெ.க.வின் பலம் மற்றும் அதன் இளம் வாக்காளர்களின் ஆதரவை முழுமையாக பயன்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டிற்கு அப்பால் அதன் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் த.வெ.க.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் தென் பிராந்தியத்தில் ஒரு புதிய அரசியல் டிரண்டை உருவாக்க முடியும் என்றும் அந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைகளில் உச்சபட்ச ஆச்சரியம் அளிக்கும் அம்சம் என்னவென்றால், 2026 சட்டமன்த் தேர்தலை தாண்டி, 2029ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான ஒரு மெகா டீலிங் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தேர்தலில் தேசிய அளவில் கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், தமிழக வெற்றி கழகத்துக்கு மத்திய ஆட்சியில் முக்கியப் பங்கு அளிக்கப்படும் என்று பிரவீண் சக்கரவர்த்தி உறுதி அளித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.

கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன ஒரு மாநில கட்சிக்கு, தேசிய அளவில் மத்திய ஆட்சியில் பங்கு அளிப்பது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகப் ரிய வளர்ச்சி மற்றும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த டீலிங், த.வெ.க.வின் இளைஞர் பட்டாளத்தையும், அதன்பின் உள்ள திரண்ட மக்கள் பலத்தையும் தேசிய அளவில் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் கட்சி ஆலோசிப்பதாக தெரிகிறது.

விஜய்யுடன் பிரவீண் சக்கரவர்த்தி நடத்திய இந்த சந்திப்பு, தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் உறுதியான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அனுமதி பெற்றே சக்கரவர்த்தி இந்த சந்திப்பை நடத்தியிருக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் அதிக இடங்களை பெறுவதற்கான ஒரு அழுத்த தந்திரமாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பு காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும், “தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. வேறொரு கூட்டணியை ஆராய வேண்டிய கேள்வியே இல்லை,” என்று கூறி, இந்த சந்திப்பிலிருந்து தங்களை விலக்கி கொண்டுள்ளனர். இது பிரவீண் சக்கரவர்த்தியின் தனிப்பட்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி ஓராண்டு முடிந்து இரண்டு ஆண்டு ஆவதற்குள்ளேயே, அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளை தன் பக்கம் ஈர்த்ததுடன், தற்போது தேசிய அளவில் மத்திய ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து பேசப்படும் அளவிற்கு அதன் அரசியல் முக்கியத்துவம் உயர்ந்துள்ளது.

கட்சியின் அசுர வளர்ச்சி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் த.வெ.க. ஒரு நடிகரின் கட்சி என்று குறைத்து மதிப்பிட்ட அரசியல் நோக்கர்கள், தற்போது அதன் வியூகங்கள் மற்றும் செயல்பாடுகளை தீவிரமாகக் கவனிக்க தொடங்கியுள்ளனர். இளம் வாக்காளர்களை தன்வசம் வைத்திருப்பதாலும், எந்த பெரிய தேசிய கட்சிகளுடனும் பிணைக்கப்படாமல் இருப்பதாலும், த.வெ.க.வை ஒரு வலுவான மாற்று சக்தியாக தேசிய தலைவர்கள் கருதுகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2029 மக்களவை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. த.வெ.க.வின் உடனடி இலக்கு, 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்பதே ஆகும். அந்த இலக்கின் ஒரு பகுதியாகவே, தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்குடன் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள்ளேயே, மூன்று மாநிலங்களில் கூட்டணி ஆட்சி மற்றும் மத்திய ஆட்சியில் பங்கு என்ற பெரிய கனவுகளுடன் விஜய் தலைமையிலான த.வெ.க. களம் இறங்கியிருப்பது, தமிழக அரசியலில் ஒரு புதிய யுகத்தை தொடங்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.