சென்னை – திருச்சி, சென்னை – தூத்துகுடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் என்ன பாவப்பட்டவர்களா? ஏன் இந்த பாரபட்சம்.. மத்திய அரசுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி..!

தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் உள்நாட்டு விமானச் சேவைகள் குறித்து மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக சென்னை-திருச்சி, சென்னை-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் சிறிய ரக விமானங்களான…

flight

தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் உள்நாட்டு விமானச் சேவைகள் குறித்து மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக சென்னை-திருச்சி, சென்னை-தூத்துக்குடி போன்ற முக்கிய வழித்தடங்களில் சிறிய ரக விமானங்களான ஏடிஆர் ரக விமானங்களை இயக்குவது, பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு எதிராகச் செய்யப்படும் அநீதி என்று அவர் கூறியுள்ளார்.

‘ஏசி இல்லாமல் F1 ரேஸர்கள் போல வியர்த்து செல்கிறார்கள்’

அமைச்சர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சென்னை-திருச்சி மற்றும் சென்னை-தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் ஒவ்வொரு இண்டிகோ விமானமும் முழுமையாக நிரம்பி வழிகிறது. இருப்பினும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்த முக்கிய வழித்தடங்களில் பெரிய மற்றும் உறுதியான ஏ320 ரக விமானங்களை இயக்க மறுத்து வருகிறது.”

“இந்த ஏடிஆர் விமானங்கள் மூன்றாம் நிலை நகரங்களுக்கான சேவைக்கு ஏற்றவை. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தமிழகம் போன்ற மாநிலத்திற்கு இவை ஏற்புடையவை அல்ல. மோசமான ஏ.சி வசதி கொண்ட இந்த விமானங்களில் பயணிக்கும் தொழில்முனைவோர், ‘F1 பந்தய வீரர்கள்’ போல வெப்பம் மற்றும் வியர்வையால் ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ எடை குறைவதாக என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டமிட்ட அலட்சியம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனை

தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை வேண்டும் என்றே மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரிய விமானங்களை அனுமதிக்காமல் வேண்டுமென்றே தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இத்தகைய மோசமான சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் அவர் கண்டித்தார்.

“இந்த ஏடிஆர் விமானங்கள் அடிக்கடி அதிர்வுக்கு உள்ளாவது, மற்றும் கடினமான முறையில் தரையிறங்குவது போன்ற குறைபாடுகளை கொண்டவை என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே பலமுறை பயணம் செய்யும் பயணிகள் இந்த விமானங்களை தவிர்க்கிறார்கள்” என்று தெரிவித்த அமைச்சர், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு மத்திய அரசும் இண்டிகோ நிறுவனமும் மொத்த அலட்சியம் காட்டுகின்றன என குறிப்பிட்டார்.

தொடர்ந்து எழுப்பப்படும் கோரிக்கை

இந்த குறைபாடுகளை பல முதலீட்டாளர்கள் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும், தான் பலமுறை மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர் ராம் எம்.என்.கேவுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும், நேரில் முறையிட்டதாகவும் டி.ஆர்.பி. ராஜா கூறினார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரச்சினையை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும்போதும், இண்டிகோ ஏன் சிறிய விமானங்களையே பயன்படுத்துகிறது என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பினார். புதிய விமான நிலையங்களை திறப்பதில் என்ன பயன் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.