நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதியும் கொடுத்த நிலையில் தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருந்தனர். இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி மற்ற அரசியல் கட்சிகளை வியந்து பார்க்க வைக்கும் வண்ணம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முன்னதாக மாநாட்டிற்கு திருச்சி பகுதியில் இடம் முதலில் தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் இங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அதன்பின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் இடத்தினைத் தேர்ந்தெடுத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மாநாடு நடைபெறும் இடத்தினை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
மேலும் மாநாடு குறித்து பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, வி.ஐ.பி-கள் வருகை, பொதுமக்கள் வருகை, தொண்டர்கள் வருகை, நிலத்தின் உரிமையாளர் அனுமதி, உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் அனுமதி என உள்ளிட்ட 21 கேள்விகளை முன் வைத்தனர். இதனால் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது.
தற்போது போலீசாரின் கேள்விகளுக்கு பதிலை அறிக்கையாக தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் வழங்கியிருக்கிறார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடிய வி.ஐ.பி-கள், இதர அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி கிடையாதாம். இதைத் தவிர ஆண்கள் 30,000 பேரும், பெண்கள் 15,000 பேரும், முதியோர்கள் 5,000 பேரும், மாற்றுத் திறனாளிகள் 5,00 பேரும் அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது மாநாடு தள்ளிப் போக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் 10 நாட்களே இருப்பதால் மாநாட்டிற்கான பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பில் மின்சாரம், அடிப்படை வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு போன்றவை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளில் சில அனுமதிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் மாநாடு அடுத்த மாதம் அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குத் தள்ளிப் போய் உள்ளது.
விரைவில் அதிகாரப் பூர்வத் தேதியை விஜய் வெளியிடுவார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.