எந்த பாச்சாவும் பலிக்காது.. வெளியே ஆயிரம் பேசுவார்கள்.. ஸ்டாலின் முன் பம்முவார்கள்.. கூட்டணி கட்சிகளின் நிலை என்ன?

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஸ்டாலினை மிரட்டி அதிக தொகுதிகள் வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது. ஸ்டாலினிடம் எந்த பாச்சாவுமே பலிக்காது. தங்களுடைய கட்சி கூட்டங்களில் ஆயிரம் பேசுவார்கள். ஆனால், ஸ்டாலின்…

dmk

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஸ்டாலினை மிரட்டி அதிக தொகுதிகள் வாங்கிவிடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக முடியாது. ஸ்டாலினிடம் எந்த பாச்சாவுமே பலிக்காது. தங்களுடைய கட்சி கூட்டங்களில் ஆயிரம் பேசுவார்கள். ஆனால், ஸ்டாலின் முன் அடங்கி போவார்கள். அவர் எத்தனை தொகுதி கொடுக்கிறாரோ, அதை வாங்கி கொள்வார்கள் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க. கூட்டணியின் நிலை

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்போம் என்று பொதுக்கூட்டங்களிலும், தங்களுடைய கட்சியின் கூட்டங்களிலும் பேசி வருகிறார்கள். ஆனால், அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் ஸ்டாலின் மட்டுமே உள்ளார். எனவே, அவராக பார்த்து ஒன்று, இரண்டு தொகுதி அதிகமாக கொடுத்தால்தான் உண்டு அல்லது கடந்த தேர்தலில் எவ்வளவு தொகுதிகள் பெற்றார்களோ, அதே தொகுதிகளை வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான் ஸ்டாலின் சொல்வார். ஸ்டாலினை எதிர்த்து அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை. எனவே, வெளியே ஆயிரம் பேசினாலும், கூட்டணி பேச்சுவார்த்தை என்று வரும்போது கண்டிப்பாக ஸ்டாலின் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள்; ஸ்டாலின் கொடுப்பதைத்தான் வாங்கிக் கொள்வார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

ஸ்டாலினின் அணுகுமுறை

ஸ்டாலினை பொறுத்தவரை தற்போதைய கூட்டணி வெற்றி கூட்டணியாக இருப்பதால், அந்த கூட்டணியை அவர் கலைக்க விரும்ப மாட்டார். எனவே, அனைவரையும் அரவணைத்து கொண்டு, அதே நேரத்தில் புதிய கட்சிகளையும் சேர்க்க முன்வருவார். ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சி, தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் கூட, அது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ஆலோசனை செய்து, அவர்களின் சம்மதத்தை பெற்றுத்தான் பா.ம.க.வை உள்ளே அழைத்து வருவாரே தவிர, விடுதலை சிறுத்தைகள் கோபப்படும் அளவுக்கு அவர் அரசியல் செய்ய மாட்டார். அதேபோல் தே.மு.தி.க. உள்ளே வந்தால் கூட, அது குறித்தும் கூட்டணி கட்சிகளிடம் அவர் ஆலோசனை கேட்பார். அப்படித்தான் அவர் அரசியல் செய்வாரே தவிர, கூடுதல் கட்சிகளை கொண்டு வர போகிறேன் என்று கூறி கூட்டணி கட்சிகளை மிரட்டும் அளவுக்கு அவர் அரசியல் செய்ய மாட்டார் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

வரவிருக்கும் தேர்தல் சவால்கள்

மொத்தத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கிருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்றும், ஆட்சி மீது அதிருப்தி இருந்தாலும், கூட்டணி கட்சியின் பலத்தால் மீண்டும் ஆட்சியை வென்றுவிடலாம் என்றுதான் ஸ்டாலின் நினைக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் வேறு புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றும், விஜய் கூட்டணியிலும் கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என்றும் ஒரு சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இருப்பினும், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே இருக்குமா அல்லது ஒன்று, இரண்டு கட்சிகள் பிரிந்து அ.தி.மு.க. அல்லது விஜய் கூட்டணிக்குச் செல்லுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Stalin Cannot Be Threatened for Seats”: Political Analysts Warn DMK Alliance Parties!