தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பிறகு, மாநிலத்தின் அரசியல் வரைபடமே மாற்றி எழுதப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
குறிப்பாக, பல ஆண்டுகுஅளாக 1 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டு, திராவிடக் கட்சிகளிடம் பேரம் பேசி மிரட்டி வந்த குட்டி கட்சிகள் மற்றும் ஜாதி ரீதியிலான அமைப்புகளுக்கு விஜய்யின் வருகை ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. விஜய்யின் உரையில் தென்பட்ட தெளிவும், இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுப்பதும், இனி தமிழ்நாட்டில் பாரம்பரிய பாணியிலான ‘லெட்டர்பேட்’ அரசியல் எடுபடாது என்பதையே உணர்த்துகிறது.
விஜய்யின் அரசியல் பிரவேசம் என்பது வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பி இல்லை, மாறாக ஒரு வலுவான மாற்று அரசியலை முன்னிறுத்துகிறது. இதுவரை திராவிட கட்சிகளின் பிடியில் அதிருப்தியில் இருந்த நடுநிலை வாக்காளர்களும், முதல்முறை வாக்காளர்களும் விஜய்யின் பக்கம் ஒட்டுமொத்தமாக சாய்ந்து வருகின்றனர். இதனால், தேர்தல் நேரங்களில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தங்களின் சொற்ப வாக்கு வங்கியை காட்டி அதிக இடங்களை மிரட்டி பெற்று வந்த சிறிய கட்சிகள், இப்போது தங்களின் இருப்பையே இழக்கும் அபாயத்தில் உள்ளன. விஜய்யின் வருகையால் வாக்குகள் சிதறுவது குட்டி கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதார்த்தத்தில் அவர்களது அடிப்படை வாக்கு வங்கிக்கே விஜய் வேட்டு வைத்துள்ளார்.
தேர்தல் அரசியல் என்பது இன்று மிகப்பெரிய முதலீடு தேவைப்படும் ஒரு தொழிலாக மாறிவிட்ட சூழலில், சிறிய கட்சிகள் இனி தேர்தல் களத்தில் இறங்குவது என்பது தற்கொலைக்கு சமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு தொகுதியில் பல கோடி ரூபாயை செலவு செய்தாலும், விஜய்யின் அலைக்கு முன்னால் தங்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை பல குட்டி கட்சி தலைவர்கள் உணர்ந்துள்ளனர். “போட்ட முதலீடு கூட தேறாது” என்ற அச்சம் நிலவுவதால், இனி அரசியலை விட்டுவிட்டு வேறு தொழில்களை பார்க்கலாமா என்ற மனநிலைக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ‘லெட்டர்பேட்’ கட்சிகளின் ஜோலியை முடித்துவிடும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
விஜய் தனது உரையில் சாதி மற்றும் மத அரசியலுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு, குறிப்பிட்ட சமூக வாக்குகளை மட்டும் நம்பி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மிகப்பெரிய இடியாக அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றிருந்த கட்சிகள், இன்று அதே சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் “தலைவா” என விஜய்யின் பின்னால் செல்வதை கண்டு மிரண்டு போயுள்ளனர். இது ஜாதி அரசியலின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதை காட்டுகிறது. விஜய்யின் இந்த ‘மாஸ்’ அரசியல், குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி போயிருந்த சிறிய கட்சிகளின் வாக்கு வங்கியை உடைத்து, அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை தொடங்கிவிட்டது.
பெரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட விஜய்யின் இந்த அதிரடி மாற்றத்தால் தங்களின் வியூகங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. தங்களை மிரட்டி கொண்டு இருந்த சிறிய கட்சிகள் காலியாவதை ஒருபுறம் ரசித்தாலும், அந்த வாக்குகள் விஜய்யிடம் செல்வது தங்களுக்கு பெரிய ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால், சிறிய கட்சிகளை தங்களுக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் திராவிட கட்சிகள் இறங்கியுள்ளன. ஆனால், அந்த கட்சிகளின் தொண்டர்களோ தங்கள் தலைவர்களின் பேச்சை கேட்காமல், மாற்றத்தை விரும்பி தவெக-வின் பக்கம் குதித்து வருவது அரசியல் கட்சிகளுக்கு திக்குமுக்காடலை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி என்பது தமிழக அரசியலில் ஒரு சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. தேவையற்ற உதிரி கட்சிகள் மற்றும் பேரம் பேசும் அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான கட்சிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் என்ற அரசியல் விமர்சகர்களின் கணிப்பு உண்மையாக வாய்ப்புள்ளது. குட்டி கட்சிகள் தங்களின் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே ஈரோடு கூட்டத்தில் விஜய் அடித்த ‘பேயடி’ உறுதிப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
