தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அரசியல் கட்சிகள் இடையே கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன. இது சட்ட ரீதியிலான கடமையா அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக புதிய ஆபத்தா என்பது குறித்து அரசியல் வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.ஐ.ஆர். என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய, வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் ஒரு சட்டப்பூர்வ நடைமுறை. இது சுதந்திரத்திற்கு பிறகு பல முறை நடத்தப்பட்டுள்ளது. எனவே, கொள்கை அளவில் இதை யாரும் எதிர்க்க முடியாது அல்லது எதிர்க்க கூடாது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், ஒரு வருடம் முழுவதும் நடத்த வேண்டிய இந்த திருத்த பணியை, தேர்தல் ஆணையம் அவசர கோலத்தில் நடத்துவதுதான் பிரச்சனை என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் இத்தகைய அவசரம் சிக்கலை உருவாக்குகிறது.
திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்ப்பதற்கு காரணம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்பது தான். அவசரமாக நடத்தப்படும் இப்பணியால், உண்மையான, தகுதியுள்ள வாக்காளர்கள் பலர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம்.
புலம்பெயர் தொழிலாளர்களின் குறிப்பாக வடமாநிலத்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால், அவர்கள் பாஜக-வுக்கே வாக்களிக்கக்கூடும் என்ற அரசியல் அச்சம். தொடர்ந்து எஸ்.ஐ.ஆர் குறித்து பீதியையும், அச்சத்தையும் கிளப்புவது, வாக்காளர்களை சோர்வடையச் செய்து, ‘யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றும் மாறப்போவதில்லை’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, வாக்களிக்க ஆர்வம் இல்லாமல் செய்துவிடும். இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவே திரும்பும்.
2005 அல்லது 2006-க்கு பிறகு பிறந்த, புதிய வாக்காளர்களுக்கு இந்த எஸ்.ஐ.ஆர். பெரிய பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர்களுக்கு பழைய பட்டியலில் பெயர் இருக்காது. இவர்கள் பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ் போன்ற அனைத்து ஆவணங்களையும் புதிதாக சமர்ப்பிக்க வேண்டும்.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பெரும்பாலான ஆதரவாளர்கள் இளைஞர்கள் என்பதால், எஸ்.ஐ.ஆர். பணியில் அவர்களது பெயர்களை பட்டியலில் சேர்ப்பது விஜய்க்கும் அவரது கட்சிக்கும் மிக முக்கியமான சவாலாகவும், முதல் பணியாகவும் இருக்கும். விஜய் கவலைப்பட வேண்டியது, தன் கூட்டத்தில் உள்ள எத்தனை பேருக்கு வாக்குரிமை உள்ளது என்பதை பற்றி மட்டும்தான்.
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 13 விசாரணைக்கு வர உள்ளது. பிகாரில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், மற்ற மாநிலங்களிலும் தடை விதிக்க வாய்ப்பு மிக குறைவு.
மாறாக, தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட நீக்கப்படக் கூடாது என்றும், வாக்காளர் சேர்க்கைக்கான படிவங்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்றும், புகார்களை தீர்க்க விரைவான செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு தெளிவான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் எஸ்.ஐ.ஆர். என்பது தவிர்க்க முடியாத சட்ட செயல்முறை என்றாலும், அதற்கான கால அவகாசம் குறைவு என்பதும், அதன் செயலாக்க முறையும் திருப்தி அளிப்பதாக இல்லை என்பதும் அரசியல் கட்சிகளின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
