தமிழக அரசியல் சூழலில் தற்போது நிலவும் இரட்டை நிலப்பாடுகள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன. குறிப்பாக, ஆளும் தரப்புக்கு ஆதரவான சில திரைத்துறையினரின் நகர்வுகளும், அதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்களின் செயல்பாடுகளும் ஊடகங்களால் வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
‘பராசக்தி’ படக்குழுவினர் போன்றவர்கள் அதிகார மையத்தில் இருப்பவர்களை சந்தித்து பொங்கல் கொண்டாடினால், இங்குள்ள பகுத்தறிவுப் பகலவன்களும் செக்குலரிசம் பேசும் சிங்கங்களும் மௌனம் காப்பார்கள். ஆனால் இதே சூழலை ஒரு கற்பனையாக மாற்றி யோசித்துப் பார்த்தால் அதன் வீரியம் புரியும். ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் கொண்டாடி, மிக நெருக்கமாக பழகியிருந்தால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்? ஊடகங்களும், சமூக வலைதள செயல்பாட்டாளர்களும் அந்த படக்குழுவையும், அதன் பின்னால் இருக்கும் அரசியல் சக்தியையும் எந்த அளவுக்கு கடுமையாகத் தாக்கி இருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிகிறது. இத்தகைய சந்திப்புகள் நடந்திருந்தால் “தவெக-வின் கதை முடிந்தது” என்ற ரீதியில் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
தமிழக ஊடகங்களில் சுமார் 90 சதவீதத்தினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இந்த சூழலில் வலுப்பெறுகிறது. ஒரே மாதிரியான செயலை ஒரு தரப்பு செய்யும்போது அது ‘பண்பாடு’ என்றும், மாற்றுத் தரப்பு செய்யும்போது அது ‘சரணாகதி அரசியல்’ என்றும் முத்திரை குத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஜால்ரா தட்டும் போக்கை ஊடகங்கள் கைவிட வேண்டும் என்ற குரல்கள் உரக்க ஒலிக்கின்றன. ஒரு சாதாரண சந்திப்பை கூட அரசியல் லாபத்திற்காக திரித்துப் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.
அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததும், டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததும் ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தன. ஆனால், ஊடக விவாதங்கள் பெரும்பாலும் தினகரனின் நகர்வை நோக்கியே அதிக கவனத்தைக் குவித்தன. 15 ஆண்டுகள் அதிமுகவில் செல்வாக்குடன் இருந்த ஒருவர் கட்சி மாறுவதை விட, பிரிந்திருந்த கூட்டணி மீண்டும் இணைவதே இங்குள்ள ‘புத்திஜீவிகளுக்கு’ பெரும் கவலையை தந்துள்ளதாக தெரிகிறது.
இத்தகைய பாரபட்சமான அணுகுமுறைகள் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன. ஒரு திரைப்படைப்பு அல்லது ஒரு தனிநபரின் விருப்பங்களை அரசியலோடு இணைத்து சிறுமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்” என்ற பழமொழிக்கு ஏற்ப, திமுக தரப்பு எதை செய்தாலும் அதை நியாயப்படுத்தும் கூட்டமும், மாற்று கட்சியினர் எதைச் செய்தாலும் அதில் பிழை கண்டுபிடிக்கும் போக்கும் தமிழக அரசியலில் புரையோடிப் போயுள்ளது.
முடிவாக, தமிழக மக்கள் எதை செய்ய வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை இத்தகைய திட்டமிட்ட பரப்புரைகள் தீர்மானிக்க முடியாது. கற்பனை குதிரையை தட்டி விட்டு எதிர்மறை அரசியலை விதைப்பவர்களுக்கு, வரும் 2026 தேர்தல் ஒரு தகுந்த பாடத்தை புகட்டும். உண்மையான மதச்சார்பின்மையும், பகுத்தறிவும் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பையும் மரியாதையையும் அளிப்பதில் தான் இருக்கிறது. தங்களுக்கு சாதகமானவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற போக்கு வெகுநாட்களுக்கு செல்லுபடியாகாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
