தமிழக அரசியல் களம் 2026-ல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க தயாராகி கொண்டிருக்கும் வேளையில், நீண்டகாலமாக தங்களின் வாக்கு வங்கியை செதுக்கிய கட்சிகளுக்கு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிம்ம சொப்பனமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, கடந்த 25 ஆண்டுகளாக தலித் அரசியலையும் சமூக நீதியையும் முன்னிறுத்தி, ஒவ்வொரு சதவீத வாக்குகளையும் குருவி சேர்ப்பது போல சேர்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்கு வங்கி இப்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மறுபுறம், கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் தேசியம் என்ற ஒற்றை முழக்கத்துடன் சீமான் கட்டியமைத்த நாம் தமிழர் கட்சியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. மாற்று அரசியல் என்று பேசி இளைஞர்களை ஈர்த்து வந்த சீமானின் வாக்கு வங்கியை, விஜய் தனது வருகையின் மூலம் மிக எளிதாக கவர்ந்து வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் 3 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றால், அது அவரது அரசியல் பயணத்தின் முடிவாக கூட அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நீடிக்கவும், தேர்தல் களத்தில் ஒரு சக்தியாக திகழவும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை தக்கவைக்க வேண்டியது அவசியம்.
திருமாவளவன் போன்ற தலைவர்கள் தங்களின் அரசியல் அனுபவத்தை கொண்டு ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியில் அதிகார பகிர்வு என்ற பெயரில் தப்பித்து கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் மத்திய அரசியல் இனி வேனாம் என்று முடிவெடுத்து மாநில அரசியலுக்கு திரும்பியதால் கட்சியின் வாக்குகள் மீண்டெடுக்க வாய்ப்பு உண்டு.
ஆனால், “யாரோடும் கூட்டணி இல்லை” என்று பிடிவாதமாக இருக்கும் சீமான், இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் தாக்குப்பிடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக தெரிகிறது.
மொத்தத்தில் 2026 தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு ‘சுத்திகரிப்பு’ தேர்தலாக இருக்கப்போகிறது. இதில் வலுவான அடித்தளம் இல்லாத கட்சிகளும், மக்களின் புதிய எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்காத தலைவர்களும் ஓரங்கட்டப்படுவார்கள். விஜய்யின் வருகை என்பது வெறும் சினிமா கவர்ச்சி மட்டுமல்ல, அது காலத்தின் மாற்றமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
