டெல்லி: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் களம் இறங்கினார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் 62 ஓட்டுகள் வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் தேவியை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி மனு தாக்கல் செய்திருந்தார். பிரியதர்ஷினி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடத்தப்பட்டது. இதில் நான் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனவே தேவியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேவியின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 14-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தேவி சார்பில் வக்கீல் பி.கருணாகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தேவி சார்பில் மூத்த வக்கீல் ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். பிரியதர்ஷினி சார்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ண குமார் ஆஜரானார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், ‘தேவியின் மேல்முறையீட்டு மனுவை ஏற்றதுடன், காரைக்குடி சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து, தேவியின் வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டது.