சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை பலரை வீழ்த்திய சந்தியா சிக்கியது எப்படி.. அவருடன் இருந்த தமிழ்செல்வி யார்?

By Keerthana

Published:

திருப்பூர்: திருமணம் செய்து ஏமாற்றி நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்டிருந்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. எஸ்ஐ முதல் சர்வேயர் வரை பலரை திருமணம் செய்து நகை பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த சந்தியா குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஒரு பெண் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்துள்ளது. அவரிடம் ஏமாற்ற ஆண்களின் எண்ணிக்கை ஏராளம் என்கிறார்கள். போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இதனை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராஜாவுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்துக்கு பெண் தேடி வந். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒரு மேட்ரிமோனியல் ஆப் மூலம் பெண்ணை தேடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆன்லைன் ஆப் மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் ராஜாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

ராஜா உடன் சந்தியா வாட்ஸ்அப் மூலம் பேசி உள்ளார். அப்போது ராஜாவிடம் தனது திருமணத்திற்கு வரன் தேடுவதாகவும், தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா கூறியிருக்கிறார். கையோடு தமிழ்ச்செல்வியையும் ராஜாவுக்கு சந்தியா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்பிறகு இருவரும் செல்போனில் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சந்தியா, ராஜாவை கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் ராஜாவுக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி, பழநி அருகே ஒரு கோயிலில், இனிதே திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது, 12 சவரன் நகையை சந்தியாவிற்கு ராஜாவின் பெற்றோர் அணிவித்தனர்.

ஆனால் திருமணம் நடந்த சில நாளிலேயே அப்பெண்ணின் நடவடிக்கையில் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்களுடன் அவர் பேசி வருவதாக ராஜாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் சந்தியாவின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க தொடங்கிய ராஜா, அடையாள அட்டையை பார்த்திருக்கிறார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் அதிகமாக இருப்பதையும் பார்த்து அதிர்ந்தார்.

இதனால் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்த ராஜா, திருமணம் ஆனதை மறைத்து சந்தியா தன்னை திருமணம் செய்தது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சந்தியா, ராஜா மற்றும் அவரது குடும்பத்தையும் மிரட்டினாராம். இதனால் உஷாரான ராஜா, சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் நைசாக பேசி தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தியா அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளதாம். அதன் மூலம் ஒரு குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு கரூரைச் சேர்ந்த எஸ்ஐ மற்றும் கொடுமுடியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி மகன், சர்வேயர் உள்பட 15 பேரை வரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக சந்தியா மீது புகார் எழுந்துள்ளது.

அவர்களுடன் மனைவிபோல் சில மாதங்கள் வாழும் சந்தியா சில நாளில் வேண்டுமென்றே சண்டை போட்டுவிட்டு, நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவாராம். பலர் மனைவி ஓடிப்போன விவகாரம் தெரியவந்ததால் அவமானம் என்று கருதி புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்த சந்தியாவுக்கு புரோக்கர் தமிழ்ச்செல்வி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.