சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்து ஆன்லைன் வழியாகவே பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.
ஆனால் அவ்வாறு பிறரது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும் போது தவறுதலாக வேறு சிலருக்கு பணம் சென்று விடுகிறது. இதனை UPI அல்லது சம்பந்தப்பட்ட வங்கியிடம் தெரிவிக்கும் போது தவறுதலாக பரிவர்த்தனை நடைபெற்ற பணத்தினை முடக்கி விடுவார்கள்.
மேலும் முறையான ஆய்வுக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கிற்கு பணம்திருப்பி வரவு வைக்கப்படும். தற்போது ஆதார் எண், தொலைபேசி எண்ணுடம் அனைத்து வகையான வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டு விட்டதால் தொலைபேசி எண் இருந்தாலே பணம் அனுப்பும் எளிய நடைமுறையும் புழக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த அமித் மேங்கன் என்பவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.5 லட்சம் பணத்தினை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்புவதற்குப் பதிலாக தவறுதலாக மற்றோர் எண்ணிற்க்கு அனுப்பி விட்டார். இந்த வங்கிக் கணக்கானது சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள 9-ம் வகுப்பு பயிலும் மாணவனின் வங்கிக் கணக்காகும்.
சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?
தனது அக்கவுண்டிற்கு பணம் வந்தது கூட இந்த மாணவனுக்குத் தெரியாது. இந்நிலையில் வங்கியிலிருந்து மேலாளர் மாணவனின் தந்தை செல்போனுக்கு அழைத்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டது குறித்துத் தெரிவிக்க அப்போது வங்கிக் கணக்கினை சோதித்துப் பார்க்கையில் மாணவனின் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனே முகம்மது அஷ்ரத் என்ற அந்த மாணவனின் தந்தை அவரை அழைத்துக் கொண்டு சம்பந்தப் பட்ட வங்கிக்குச் சென்று எந்தக் கணக்கிலிருந்து பணம் வரவு வைக்கப்பட்டதோ ராஜஸ்தானைச் சேர்ந்த அமித் மேங்கனின் வங்கிக் கணக்கிற்கு மீண்டும் 2.5 லட்சம் பணத்தினை அனுப்பியிருக்கிறார். மாணவன் மற்றும் அவரின் தந்தையின் நேர்மையினை வங்கி அதிகாரி உட்பட பலர் பாராட்டினர்.