இந்த நிலையில், “₹” எனும் ரூபாய் சின்னத்தை “ரூ” என மாற்றியிருப்பது எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கிறது. ரூபாய் சின்னத்தை வடிவமைத்த உதயகுமார் சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். “ஒரு தமிழர் உருவாக்கிய ரூபாய் சின்னத்தை திமுக அரசு பயன்படுத்தாமல் ஒதுக்குவது மிகப்பெரிய குற்றம்,” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து பதிலளித்த உதயகுமார், “ரூபாய் சின்னம் வடிவமைத்ததன் பெருமை எனக்கு இருக்கிறது. ஆனால், தமிழக அரசை விமர்சிக்க விரும்பவில்லை. ரூபாய் சின்னத்தை மாற்றியதற்கான காரணத்தை அரசுதான் விளக்க வேண்டும். ஒரு வடிவமைப்பாளராக இப்படியான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த விவகாரம் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மேலும், தமிழக அரசின் முடிவை என் பணிக்கு அவமதிப்பாக கருதவில்லை,” என்றார்.
மேலும், “எல்லா வடிவமைப்புகளும் வெற்றி பெற வேண்டும் என்றோ, பாராட்டப்பட வேண்டும் என்றோ சொல்ல முடியாது. சில நேரங்களில் விமர்சனமும் வரும். ஒரு வடிவமைப்பாளராக நான் அனைத்தையும் நேர்மறையாக பார்க்கிறேன். எனவே, அரசின் இந்த முடிவை என் பணிக்கான அவமதிப்பாக கருதவில்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் உருவாக்கிய சின்னத்தையே திமுக அரசு ஒதுக்கி வைத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “என் அப்பா தர்மலிங்கம், நான் பிறப்பதற்கு முன்பே எம்எல்ஏவாக இருந்தவர். திமுக முன்னாள் எம்எல்ஏவின் மகன் என்பதற்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு தற்செயலான ஒற்றுமை,” என்று தெரிவித்தார்.
மேலும், இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து கேட்ட கேள்விக்கு, “நான் பதிலளிக்க விரும்பவில்லை. வடிவமைப்பு சார்ந்த விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளேன்,” என்றார்.
இந்த நிலையில், “ரூ” என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எழுத்தாக இருந்தாலும், தேசிய அளவில் ஏற்கப்பட்ட ₹ சின்னத்திற்கு மாற்றாக இருக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுக ஒரு மொழிப்போரை மேலும் தூண்டும் வகையில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை பிரிவினைவாத எண்ணங்களை ஊக்குவிப்பதாகவும், பிராந்திய மொழி வெறி என்றும் கூறியதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.