அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி உடனடியாக செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அவசர பொதுக்கூட்டம் நடத்தினார். இந்த அவசர நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு மூத்த உறுப்பினரை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் நீக்கிய பிறகு, அவரை விட தான் பெரியவர் என்று காட்டவேண்டிய அவசியம் ஈ.பி.எஸ்ஸுக்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த கூட்டத்தில் பேசிய ஈ.பி.எஸ்., செங்கோட்டையன் துரோகம் செய்துவிட்டதாகவும், துரோகம் செய்தவர்களை கடவுள் சும்மா விடமாட்டார் என்றும் பேசினார். ஆனால், செங்கோட்டையன் மூன்று வருடங்களாக துரோகம் செய்ததற்கான எந்த உறுதியான ஆதாரத்தையும் ஈ.பி.எஸ். வெளிப்படையாக காட்டாதது, அவரது வாதத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுகவில் நடக்கும் இந்த குழப்பங்களுக்கு பின்னணியில் ஒரு பெரிய சதி இருப்பதாக அரசியல் விமர்சகர் குபேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதிமுக கட்சியை பலவீனப்படுத்த ஒரு ‘விஐபி’க்கு ரூ.50 கோடி கைமாறியுள்ளதாகவும், இந்த தொகையை பெற்றவர் அதிமுகவில் குழப்பத்தை விளைவித்து, அக்கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ரகசிய தகவல் உலா வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் திராவிட கட்சி ஒன்றை இந்த தேர்தலில் அழிக்க வேண்டும் என்பதே இந்த சதியின் வியூகமாக இருக்கலாம் என்றும் குபேந்திரன் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். குபேந்திரன் அந்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
அதிமுகவின் அதிருப்தியாளர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் விஐபி மற்றும் செங்கோட்டையன் மூலம் த.வெ.க.வில் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தஞ்சாவூர் டெல்டா மாவட்டத்தின் முக்கிய தலைவரான வைத்திலிங்கம், த.வெ.க.வில் இணைய தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ்ஸின் நிலை மேலும் பலவீனமடைந்துள்ள இந்த நேரத்தில், செங்கோட்டையன் பிரிந்துபோன அதிமுகவினரை ஒருங்கிணைத்து விஜய்யுடன் சேர்ப்பது, அதிமுகவை பலவீனப்படுத்துவதற்கும், 2026-ல் தி.மு.க. vs த.வெ.க. என்ற போட்டி சூழலை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்ட வியூகமாக இருக்கலாம்.
அதிமுகவில் மூத்த தலைவர்கள் விலகி செல்வது, ஈ.பி.எஸ்ஸின் தலைமையின் கீழ் கட்சி பலவீனப்பட்டு வருவதையே காட்டுகிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எல்லாம் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் கட்சிக்குள் அதிருப்தியை வளர்க்கிறது. ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்கள் சிறிய தலைவர்கள்கூட வெளியேறாமல் பார்த்துக்கொண்ட நிலையில், ஈ.பி.எஸ். முக்கிய தலைவர்களை வெளியேற அனுமதிப்பது, 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், ஒரு பெரிய அரசியல் சக்தி, பணத்தை பயன்படுத்தி அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழக அரசியல் களத்தில் ஒரு திராவிட கட்சியை அழிப்பதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாகவும், ஈ.பி.எஸ். இந்த சதி வலைகளை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் குபேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
