சமூக வலைதளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கு தளங்களாக மட்டும் இல்லாமல், அரசியல் அதிகாரங்களை கட்டமைக்கவும், தனிநபர் விமர்சனங்களை முன்னெடுக்கவும் கூடிய ஒரு வலிமையான ஆயுதமாக மாறியுள்ளன. இந்த சூழலில், முன்னணி அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமான பிம்பத்தை உருவாக்கவும், எதிர்தரப்பை வீழ்த்தவும் ‘இன்புளுயன்சர்களை’ பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன.
குறிப்பாக, தமிழக அரசியலில் ஒரு வீடியோவை பேசுவதற்கு அல்லது குறிப்பிட்ட கருத்தை பரப்புவதற்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு சில யூடியூபர்களுக்கு மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை ஊதியமாக கிடைப்பதாகவும், அவர்கள் மூலம் ஒரு கட்சிக்கு ஆதரவாகவும், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்கும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ போன்ற கட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரை செய்ய தூண்டுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசியல் கட்சிகளின் ஐடி விங்குகள் இப்போது தனிப்பட்ட முறையில் செல்வாக்கு மிக்க நபர்களை அணுகி, தங்களுக்கு எதிரான விமர்சனங்களை தவிர்க்குமாறு கோருகின்றன. ஒருவேளை அந்த நபர்கள் அதற்கு இணங்கவில்லை எனில், அவர்கள் மீது சட்ட ரீதியான மிரட்டல்கள் விடுக்கப்படுவதும், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை இணையத்தில் பொதுவெளியில் பகிர்ந்து அச்சமூட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, கனிம வள கொள்ளை அல்லது நிர்வாக சீர்கேடுகள் குறித்து பேசும் இளைஞர்களுக்கு அதிகார தரப்பிலிருந்து லீகல் நோட்டீஸ்கள் அனுப்பப்படுவது போன்ற நடவடிக்கைகள் அவர்களின் குரலை ஒடுக்க எடுக்கப்படும் முயற்சிகளாக பார்க்கப்படுகின்றன. பணம் மற்றும் அதிகாரம் என்ற இரு முனை கத்திகளை வைத்துக்கொண்டு, நடுநிலையாக பேசுபவர்களை தங்களின் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் பெரும் முதலீடுகளை செய்கின்றன.
சமூக வலைதளங்களில் ஒருவரை புகழ்ந்து பேசுவதற்கோ அல்லது இழிவுபடுத்துவதற்கோ வழங்கக்கப்படும் ஸ்கிரிப்டுகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருப்பதை மக்கள் கவனித்து வருகின்றனர். சமீபகாலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவருக்கு எதிராக பேசுவதற்கு இன்புளுயன்சர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல யூடியூபர்கள் ஒரே மாதிரியான கருத்துகளை பதிவிடுவதன் மூலம், ஒரு செயற்கையான பொதுக்கருத்தை உருவாக்க முனைகின்றனர். பணத்திற்காக தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் நபர்கள் தங்களின் நம்பகத்தன்மையை இழக்கின்றனர். இதனால் மக்கள் இப்போது எதை உண்மை, எதை விளம்பரம் என்று பிரித்துப் பார்க்கும் பக்குவத்தை பெற்று வருகின்றனர்.
அரசியல் தெரியாத இளைஞர்களை ‘தற்குறிகள்’ என்று பட்டம் கட்டி விமர்சிப்பதை ஒரு கருவியாக ஐடி விங்குகள் பயன்படுத்துகின்றன. ஆனால் உண்மையில், புதிய அரசியல் தலைவர்களின் வருகைக்கு பிறகுதான் பல இளைஞர்கள் அரசியலை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர். ஆதாரங்களுடன் தரவுகளை பகிரும் வீடியோக்கள் மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
இறுதியாக, ஊடக அறம் என்பது பணத்திற்கு விலைபோக கூடியது அல்ல என்பதை சில இளைஞர்கள் தங்களின் செயல்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர். மாதம் பல லட்சங்கள் தர முன்வந்தாலும், தங்களின் நேர்மையையும் மக்களின் நம்பிக்கையையும் விட்டுக்கொடுக்காமல் உண்மைகளை பேசி வருவது பாராட்டத்தக்கது. அரசியலில் ஊழல் என்பது வெறும் பண பரிமாற்றம் மட்டுமல்ல, அது மக்களின் அடிப்படை உரிமைகள் வரை ஊடுருவி இருப்பதை உணர வேண்டிய தருணம் இது. தற்காலிக லாபத்திற்காக தவறான தரப்புகளை ஆதரிப்பது சமூகத்திற்கு இழைக்கும் துரோகம் என்பதை உணர்ந்து, அறநெறிகளை பின்பற்றுபவர்களே நீண்ட காலத்திற்கு மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
