வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்

By Keerthana

Published:

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்குதான் மின் கட்டணம் வந்துள்ளது என்றும் எனவே நீங்கள் அந்த தொகையை செலுத்தியே ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வேப்பங்கால் பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் கோபி (வயது 50). வாலாஜா சுங்கச்சாவடியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி, மகன்கள் சிமெண்டு கூரை வீட்டில் சுமார் 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.300 வரை மின் கட்டணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு-செப்டம்பர் மாத மின் பயன்பாடு அளவை கணக்கீட்டாளர் கணக்கிட்டு கோபியின் வீட்டுக்கு ரூ.47,249 மின் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கோபி பள்ளிகொண்டா மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி முறையிட்டுள்ளார்.

அதற்கு இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்குதான் மின் கட்டணம் வந்துள்ளது. எனவே நீங்கள் அந்த தொகையை செலுத்தியே ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு கோபி, எங்கள் வீட்டில் மின் விளக்கு, மின்விசிறி தவிர வேறொன்றும் இல்லை. பின்னர் எப்படி இவ்வளவு தொகை வரும் என கேட்டு என்னால் இவ்வளவு தொகை கட்ட முடியாது என கூறியுள்ளார்.

தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கிய கோபி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் இதுபற்றி புகார் மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளிகொண்டா மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளரிடம் இதுபற்றிய விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். சாதாரண சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47,249 மின் கட்டணம் வந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது