தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை மற்றும் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தற்போதைய சூழலில் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை விதித்த 84 நிபந்தனைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் அவர்களை கோபப்படுத்துவது இயல்புதான் என்று பத்திரிகையாளர் மணி சுட்டிக்காட்டுகிறார். ஒரு பந்தை எவ்வளவு பலமாக அடிக்கிறோமோ, அவ்வளவு வேகமாக அது எழும்புவது போல, விஜய்யின் மீதான இத்தகைய அழுத்தங்கள் அவரது அரசியல் வளர்ச்சிக்கே சாதகமாக அமையும் என்பது நிதர்சனம்.
கூட்டம் முடிந்த பிறகு அந்த இடத்தை தூய்மைப்படுத்துவது போன்ற பணிகளை விஜய்யின் கட்சியினரே செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏன் மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் திமுக நடத்திய கூட்டங்களில் இத்தகைய தூய்மை பணிகளை அவர்களே செய்தார்களா என்ற கேள்வி மூலம், விஜய்க்கு மட்டும் ஏன் தனி சட்டம் போடப்படுகிறது என்ற விவாதம் கிளம்பியுள்ளது. தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது தவெக தொண்டர்களுக்கு ஏற்படும் கோபம் நியாயமானது என்றும், இது ஜனநாயக ரீதியில் ஒரு சமமற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது என்றும் பத்திரிகையாளர் மணி கூறுகிறார்.
விஜய்யின் அரசியல் வருகை சமூகத்தின் பல்வேறு வாக்கு வங்கிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பாமகவின் வாக்கு வங்கிகளில் ஒரு பகுதி விஜய் பக்கம் நகர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக 2023ல் நடந்த கொடுமைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக என்சிஆர்பி தரவுகள் கூறுகின்றன. இது போன்ற முக்கியமான விவகாரங்களில் விஜய் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது விமர்சனத்திற்குரியதாக இருந்தாலும், அவரது வாக்கு வங்கி வளர்ந்து கொண்டே இருப்பது மற்ற கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் பத்திரிகையாளர் மணி கூறுகிறார்.
தற்போதைய திமுக அரசுக்கு எதிராக எழும் அதிருப்தி அலைகளை விஜய் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது.
விஜய் குறித்து பல பாசிட்டிவ் இருந்தாலும் விஜய் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அவரை சுற்றி இருப்பவர்கள் மற்றும் அவரது ஆலோசனை குழுவின் தரம் கேள்விக்குறியாக உள்ளது. தவறுகள் நடக்கும் போது அதை சுட்டிக்காட்ட தெரியாத அல்லது புரிதல் இல்லாத ஒரு சூழலில் விஜய் சிக்கியிருப்பதாக விமர்சகர் மணி ஆதங்கப்படுகிறார். 2026 தேர்தலை நோக்கி அவர் பயணிக்கும் வேளையில், வெறும் மக்கள் கூட்டத்தை மட்டும் நம்பாமல், ஆழமான அரசியல் புரிதலோடு செயல்பட்டால் மட்டுமே அவரால் நிலைத்து நிற்க முடியும் என்பது தெளிவாகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
