YouTube channels | யூ டியூப் சேனல்களுக்கு வருகிறது கட்டுப்பாடு? சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

By Keerthana

Published:

சென்னை: யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

முன்பு நியூஸ் பேப்பர்கள், வார இதழ்கள்தான் செய்திகளை புலனாய்வு செய்து வெளியிட்டு வந்தன. அதனை பின்னாளில் காட்சி ஊடகங்கள் செய்யத்தொடங்கின. அடுத்ததாக வந்த டிஜிட்டல் ஊடகங்கள் அதைவிட அதிகமாக செய்யத்தொடங்கின. இப்போது சமூக ஊடகங்களான யூடியூப் ஊடகங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி எதனை வேண்டுமானாலும் விசாரிக்கின்றன.

இதில் சில ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைப்பாட்டில் செயல்படுகின்றன. சில சமூக ஊடகங்கள் வியூஸ்க்காக பொய்யான தலைப்பு வைத்து தவறான குற்றச்சாட்டுகளையும், தவறான தகவல்களையும் தருகின்றன. இவற்றிற்கு எந்த கட்டுப்பாடும் சட்ட ரீதியாக இல்லை. ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், வெப்சைட் மற்றும் யூடியூப் ஊடகங்களையும் இதுவரை அரசு முறைப்படுத்தவில்லை.

இந்நிலையில் யூ டியூப்களை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை எனக் கூறி, சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், குற்ற வழக்குகளில் யூ டியூப் சேனல்கள் ஊடக விசாரணை நடத்துவதால் காவல் துறையினரின் புலன் விசாரணை பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

யூ டியூப் சேனல்கள் பதிவுகளை முறைப்படுத்த எந்த நடைமுறையும் இல்லாததால் பொது அமைதி பாதிக்கப்படுவதால் யூ டியூப் சேனல்களை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று பார்த்திபன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, யூ டியூப் நிறுவனத்தையும், மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என தமிழக அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் கூறினார்.

இதையடுத்து, வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.