1996ல் ரஜினி மிஸ் செய்ததை 30 வருடங்கள் கழித்து நிறைவேற்றும் விஜய்.. திராவிடம் இல்லாத தமிழ்நாடு தான் மக்கள் கனவு.. ஆன்மீக பூமிக்கு எதற்கு திராவிடம்..!

1996 ஆம் ஆண்டு தமிழக அரசியல் களம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்போது ரஜினிகாந்த் ஒரு தனி கட்சியை தொடங்கி நேரடியாக அரசியலுக்கு வந்திருந்தால், அவரே முதல்வராகியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று பரவலாக…

rajini vijay

1996 ஆம் ஆண்டு தமிழக அரசியல் களம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்போது ரஜினிகாந்த் ஒரு தனி கட்சியை தொடங்கி நேரடியாக அரசியலுக்கு வந்திருந்தால், அவரே முதல்வராகியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று பரவலாக நம்பப்பட்டது. குறைந்தபட்சம், ஜி.கே. மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, அவருக்கு ரஜினி ஆதரவு அளித்திருந்தால், நிச்சயமாக அவர் வெற்றி பெற்று முதல்வராக வந்திருப்பார் என்பதும் அன்றைய வலுவான கணிப்பாக இருந்தது.

ஆனால், அன்றைய தினம் கருணாநிதியின் சாணக்கியத்தனம் காரணமாக, மூப்பனாரை தனது பக்கம் இழுத்து, தி.மு.க.வே ஆட்சிக்கு வந்தது. ரஜினிகாந்த் இழந்ததாக கருதப்படும் இந்த அரிய அரசியல் வாய்ப்பைத்தான், தற்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து, 2026 இல் விஜய் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் வலுவாக உள்ளது.

ஆன்மீக பூமி vs திராவிட அரசியல்

தமிழகம் எப்போதுமே ஒரு ஆன்மீக பூமியாகவே இருந்து வருகிறது. சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர பேரரசுகள் என அனைத்து ஆட்சியாளர்களும் தமிழகத்தை ஆன்மீக பெருமையுடன் வழிநடத்தினர். தமிழகத்தில் உள்ளது போல் வியக்கத்தக்க கோயில்கள் இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் இல்லை என்பது இதன் ஆழமான சான்றாகும். காலங்காலமாக ஆன்மீக பூமியாக இருந்த தமிழகத்தை, திராவிட இயக்கம் தான் முதன்முதலாக நாத்திகம் பக்கம் திருப்பியது.

அதுவும், இந்து மதத்தை மட்டுமே எதிரியாக கொண்டு, மற்ற மதங்களின் கோட்பாடுகளை அனுசரித்து செல்வதுதான் திராவிட அரசியலாக இருந்தது. இந்த “போலி திராவிடத்தை” வீழ்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தை பின்பற்றும் மக்கள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தி.மு.க.விலிருந்து பிரிந்த அ.தி.மு.க.வும் திராவிட கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்ததால், மக்கள் மத்தியில் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இருப்பினும் திமுக அளவுக்கு அதிமுக நாத்திகம் பேசவில்லை என்பது ஆன்மீக பூமிக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

1996 தேர்தல்: அரசியல் சூழலும் ரஜினியின் பங்களிப்பும்

இந்த சூழ்நிலையில்தான், 1991 முதல் 1996 வரை நடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகங்கள் காரணமாக மக்கள் கடும் வெறுப்பில் இருந்தனர். அப்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை ஜிகே மூப்பனார் தொடங்கினார். அவருக்கு சோ. ராமசாமியின் வழிகாட்டுதலின்படி, ரஜினியும் ஆதரவு தர முன்வந்தார்.

இந்த நிலையில் தான், கருணாநிதி ராஜதந்திரத்துடன் செயல்பட்டார். மூப்பனாரை தனியாக விட்டால், அவர் ஆட்சியை பிடித்து விடுவார் என்பதை உணர்ந்து, உடனடியாக அவரை அழைத்து, அவர் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், நாடாளுமன்ற தொகுதிகள் கேட்டாரோ அத்தனை சீட்டுகளையும் வாரி வழங்கினார். கட்சி ஆரம்பித்த ஒரே வாரத்தில் அவருக்கு 40 சட்டமன்ற தொகுதிகளும், 20 பாராளுமன்ற தொகுதிகளும் வழங்கப்பட்டன.

அன்று மூப்பனார் கருணாநிதியுடன் கூட்டணி வைக்க மறுத்து, ரஜினியின் ஆதரவுடன் தனித்து போட்டியிட்டிருந்தால், அவர்தான் முதல்வராக இருந்திருப்பார். ரஜினியும் அவருக்கு முழு ஆதரவு கொடுத்திருப்பார். மூப்பனார் மற்றும் ரஜினி ஆகிய இருவருமே சேர்ந்து அன்றே திராவிடத்தை வீழ்த்தியிருக்கலாம். ஆனால், அந்த அரிய வாய்ப்பு தவறவிடப்பட்டது.

2026: விஜயின் ஆன்மீக அரசியல் கனவு மற்றும் சவால்கள்

இந்த நிலையில் தான், தற்போது 30 ஆண்டுகள் கழித்து, அதே திராவிட அரசியலை “வீட்டுக்கு அனுப்ப” விஜய் முயன்று வருகிறார். தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்று வெளிப்படையாக அறிவித்துவிட்ட நிலையில், அ.தி.மு.க.வுடன் அவர் இதுவரை எந்தவிதமான நேரடி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. தே.மு.தி.க., மதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளையும் தனது கூட்டணியில் சேர்க்க முடியாது என்ற கொள்கையையும் அவர் வைத்திருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.

எனவே, 2026 தேர்தலில் வெற்றி பெற்றால், 1996 இல் ரஜினி தவறவிட்டதை விஜய் நிறைவேற்றுவார் என்றுதான் தமிழகத்தில் உள்ள ஆன்மீக சிந்தனை கொண்ட மக்கள் கருதி வருகின்றனர். தமிழகம் காலங்காலமாக ஆன்மீக பூமியாக இருந்து வரும் நிலையில், இங்கு இதை “பெரியார் பூமி”, “திராவிட பூமி” என்று போலியாக மாற்றி அமைத்துள்ளனர் என்ற கருத்து பரவலாக உள்ளது.

அதே நேரத்தில், பகுத்தறிவு பகலவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் தலைவர்கள், வீடுகளுக்குள் ஆன்மீக பாதையை யாருக்கும் தெரியாமல் பின்பற்றுவார்கள் என்றும், ஆனால் வெளிப்படையாக அரசியல் மேடைகளில் பகுத்தறிவு மற்றும் நாத்திகம் பேசுவார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்தையும் அவர்கள் விமர்சனம் செய்ய மாட்டார்கள், புண்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள், இந்து மதத்தை மட்டுமே குறிவைப்பார்கள், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசுவார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இதற்கெல்லாம் முடிவு கட்ட ஒரு மதச்சார்பற்ற தலைவராக விஜய் இருப்பார் என்பது, 30 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.