நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம். ஆனால், ராகுல் காந்தியின் தூதர் ஒருவரே விஜய்யை சந்தித்தது, தவெகவுக்கு கிடைத்த ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியாகவும் அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் அமைதியாக இருந்தாலும்கூட, அவருக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதற்குக் காரணம், அவர் பாஜகவை எதிர்ப்பவராக பார்க்கப்படுவதுதான். பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தது, திமுகவுக்கு ஒரு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. ஒருபுறம், காங்கிரஸ் தலைவர் ஸ்டாலினை சந்திப்பது, மறுபுறம் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிர்வாகியை விஜய்யிடம் பேசுவதற்கு அனுப்புவது என்று, இரண்டு பக்கமும் வாய்ப்புகளை திறந்து வைத்திருக்கும் அரசியல் ஆட்டத்தை காங்கிரஸ் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தவெகவின் தயவு தேவைப்படுவதற்கு காரணம், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கான துருப்புச் சீட்டாக அது அமையும் என்பதே. ஒருவேளை காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜய்யுடன் இணைந்தால், அது திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைந்தால், அது விஜய்க்கு லாபகரமான ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினர் வாக்குகள் 12% வரை இந்த புதிய கூட்டணிக்கு ஆதரவாக குவியும் வாய்ப்புள்ளது. மேலும், காங்கிரஸுக்கு என இருக்கும் பாரம்பரிய வாக்கு வங்கியான 3% வாக்குகளும் சேரும். இந்த இளைய தலைமுறைக்கான வாக்குகள் போக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, விஜய் போன்ற தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது, தவெகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு தேசிய செய்தியாக அமையும். இது காங்கிரஸுக்கும் தமிழகத்தில் மீண்டும் விரிவடைய ஒரு வாய்ப்பை அளிக்கும்.
பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பால், ராகுல் காந்தி வரை டீலிங் போய் கொண்டிருக்கிறதோ என்று திமுக பதற்றமடையலாம். 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ராகுல் காந்தியோ அல்லது கே.சி. வேணுகோபாலோ விஜய்யை குற்றம் சாட்டாமல் அமைதி காத்தது, இதன் ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் ஒரு கோஷ்டி, திமுகவுடன் பண பலத்திற்காக கூட்டணி வைக்க விரும்பினாலும், இன்னொரு கோஷ்டி விஜய்யுடன் கூட்டணி அமைக்கவே ஆர்வம் காட்டுகிறது. சமீபத்தில், திமுகவின் சார்பில் ஒரு பிரபலம் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததுகூட, விஜய் – காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிடுமோ என்ற அச்சத்தினால் எழுந்த ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
விஜய் இன்று ஒரு பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில், ஒரு சில திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட, கூட்டணி முடிவுகளை பார்த்து கவனமாக எடுங்கள்; ஏனெனில், எங்கள் குடும்பத்தினரும் சொந்தக்காரர்களும் விஜய்க்குத்தான் வாக்களிக்க போவதாக சொல்கிறார்கள் என்று கூறியதாக தகவல். இது விஜய்க்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கிறது. இன்று பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்தது ஒரு தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணியும் சொல்லாத நிலையில், தவெக-வின் வாக்கு வங்கி தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் ஆதரிக்கும் ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருக்கும் வரை, அவரை அசைக்க முடியாது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
