விழுப்புரம்: தீபாவளி பண்டிகைக்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதாக விஜய் அறிவித்துள்ளார். இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை கடந்த செப்டம்பர் 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றார்கள். ஆனால் மாநாடு நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டது. அக்டோபர் 27-ந் தேதி மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்படும் என்று நேற்று காலை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதையடுத்து அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற தயாராகி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தினர் ஓரிரு நாளில் போலீஸ் அனுமதி கேட்டு மனு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ள தேதியில் இருந்து 3 நாட்கள் கழித்து தீபாவளி பண்டிகை (அக்டோபர் 31) வருகிறது. அதுமட்டுமின்றி மாநாடு நடத்தப்போவதாக குறிப்பிட்டுள்ள நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதேபோல் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வழக்கத்திற்கும் மாறாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியூர்களில் தங்கியிருந்து படித்து வருபவர்கள், வெளியூர்களில் பணியாற்றி வருபவர்கள், தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்ல தயாராகுவது வழக்கம்.
இப்படிப்பட்ட சூழலில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்தால் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள். அத்துடன் மாநாட்டுக்கு வருபவர்களை சமாளித்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது போலீசாருக்கு பெரும் தலைவலியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே விஜய் அறிவித்துள்ள தேதியில் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்குவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பாக இம்மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் அந்த சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்று கூறிய காவல்துறையினர். எனவே அவர்கள் அறிவித்துள்ள தேதியில் அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து உரிய முறையில் ஆலோசனை நடத்திய பிறகே தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அனேகமாக வேறுதேதியில் மாநாட்டை தள்ளிவைக்க போலீஸ் வலியுறுத்தும் அல்லது மாநாடுக்கு அனுமதி கொடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.