பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை இன்று திறந்து வைத்த நிலையில், அந்த பாலம் திறக்கப்பட்ட சில நிமிடங்களில் பழுது ஏற்பட்டதாக வெளியாகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று நாள் அரசு பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, அதன் பிறகு இன்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து, புதிய பாம்பன் பாலத்திற்கு பச்சை கொடி அசைத்து திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் மீது சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
அதன்பின் கடலோர காவல்படை கப்பல், பழைய மற்றும் புதிய தூக்கு பாலங்கள் திறக்கப்பட்டதையடுத்து அந்த வழியாக சென்றது.
இந்த நிலையில், கப்பல் கடந்து சென்ற பிறகு, புதிய பாம்பன் பாலத்தை மீண்டும் இறக்க ரயில்வே அதிகாரிகள் முயற்சி செய்தபோது, திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக தூக்கு பாலம் சீராக இயங்கவில்லை. இதனால் பாலம் முறையாக கீழே இறங்க முடியாத நிலை உருவானது.
இருப்பினும், உடனடியாக பொறியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதை சரிசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைத்த சில நிமிடங்களில் பழுதடைந்த இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
