தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. குறிப்பாக, அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மனைவி சங்கீதாவுடனான விவாகரத்து தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக்கப்படுகின்றன. ஒரு தனிமனிதனின் அந்தரங்கம் என்பது அவரது சொந்த விருப்பம் சார்ந்தது என்ற அடிப்படை நாகரிகத்தை தாண்டி, அரசியலில் அவரை சிறுமைப்படுத்துவதற்காகவே இத்தகைய செய்திகள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிகிறது. விஜய்யின் அரசியல் எழுச்சியை கண்டு அஞ்சும் சக்திகள், கொள்கை ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாமல், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்பதே எதார்த்தம்.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியிருப்பது தற்செயலானது அல்ல, அதன் பின்னால் பெரும் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஒரு விவகாரம், விஜய் தீவிர அரசியலில் இறங்கி தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் மட்டும் முன்னுக்கு வருவது பல கேள்விகளை எழுப்புகிறது. “சங்கீதாவை யாரோ விலைக்கு வாங்கிவிட்டார்கள்” அல்லது “அரசியல் எதிரிகள் அவரை தூண்டி விடுகிறார்கள்” என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை. விஜய் மீது உண்மையான அன்பும், அவரது லட்சியத்தின் மீது அக்கறையும் இருந்திருந்தால், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் நேரத்தில் இத்தகைய சட்டப் போராட்டங்களை அவர் தவிர்த்திருப்பார் என்பதே பொதுமக்களின் ஒரு தரப்பு வாதமாக உள்ளது.
தமிழக அரசியலில் தனிப்பட்ட ஒழுக்கம் என்பது எப்போதுமே ஒரு விவாத பொருளாக இருந்தாலும், அது ஒரு தலைவரின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர் முதல் கருணாநிதி வரை பல தலைவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தவர்கள் தான். ஆனால், மக்கள் அவர்களை தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தலைவர்களாகவே பார்த்தார்கள். அதேபோல், 41 பேர் உயிரிழந்த கரூரின் துயரமான சம்பவங்களின் போது கூட, மக்கள் விஜய்யை ஒரு மீட்பராகவும், தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவராகவும் பார்த்தார்களே தவிர, யாரும் அவரை குற்றஞ்சாட்டி ஒருவர் கூட பேசவில்லை. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு முன்னால் ஒரு நடிகரின் விவாகரத்து என்பது மிகச்சிறிய விஷயமாகவே போய்விடுகிறது.
ஊடகங்களும், யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுக்கும் அரசியல் வியாபாரிகளும் தங்களது ‘வியூஸ்’ மற்றும் வருமானத்திற்காக விஜய்யை பற்றி எரியும் செய்திகளை உருவாக்கி வருகின்றனர். காலையில் எழுந்தால் விஜய்யின் குடும்பத்தை பற்றி பேசுவதையே தொழிலாக கொண்ட இத்தகைய ‘அரசியல் வியாபாரிகள்’, மக்களின் உண்மையான மனநிலையை புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். ஸ்டுடியோக்களில் அமர்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் தீர்ப்புகள் ஒருபோதும் வாக்காளர் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஒரு தலைவன் மக்களுக்காக என்ன செய்கிறான், களத்தில் அவனது பங்களிப்பு என்ன என்பதுதான் வாக்காளர்களின் ஒரே அளவுகோலாக இருக்கும். அந்த வகையில், விஜய் மீதான அதிருப்தி என்பது ஊடக வெளிச்சத்தில் மட்டுமே உள்ளது, அடிமட்ட மக்களிடம் இல்லை.
விஜய் தனது மாநாடுகளில் முன்வைக்கும் ஊழல் எதிர்ப்பு மற்றும் தற்போதைய ஆட்சியின் மீதான விமர்சனங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து அவர் பேசும் போது, மக்கள் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாக பார்க்கத் தொடங்குகின்றனர். அத்தகைய ஒரு சூழலில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுப்பதன் மூலம் அவரது அரசியல் பிம்பத்தை உடைக்கலாம் என்று ஆளுங்கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கணக்கு போடுகின்றன. ஆனால், இன்றைய காலத்து மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அரசியல் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை அவர்கள் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொண்டார்கள்.
முடிவாக, 2026 தேர்தலில் ஓட்டு போட போவது யூடியூப் விமர்சகர்களோ அல்லது சமூக வலைதள போராளிகளோ அல்ல; மாறாக, அமைதியாக மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் பொதுமக்கள் தான். அவர்களுக்கு தேவை தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு நேர்மையான தலைவனே தவிர, ஒருவரது அந்தரங்க தகவல்கள் அல்ல. விஜய் தனது அரசியல் பயணத்தில் இத்தகைய ஸ்பீடு பிரேக்கர்களை கடந்து செல்வதை பொறுத்தே அவரது வெற்றி அமையும். தனிப்பட்ட தாக்குதல்களை கடந்து, கொள்கை ரீதியான போராட்டத்தை அவர் முன்னெடுத்தால், தமிழக அரசியல் வரலாற்றில் 2026 ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
