முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், இதன் பின்னால் அதிமுகவின் எதிர்காலம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பல முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த சந்திப்பு ஆடிட்டர் குருமூர்த்தி ரூட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என்றால் டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு தனிக் கட்சி தொடங்குவது என்ற முடிவை எடுப்பதாக ஓபிஎஸ் கெடு விதித்திருந்தார். இந்த தகவல் டெல்லி தலைமைக்கு சென்ற நிலையில், அங்கிருந்து ஓபிஎஸ்-ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சந்திப்பின் போது, அமித்ஷா, கொஞ்சம் பொறுமையா இருங்கள். ஏன் அந்த முடிவையெல்லாம் எடுக்கிறீர்கள்? என்று கேட்டாராம். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், என்ன நம்பி வந்தவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் இல்லையா? எவ்வளவு நாள்தான் இப்படியே வைத்திருப்பது? என்று தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டாராம்.
ஓபிஎஸ்ஸின் கோரிக்கையையும், அவரது ஆதரவாளர்களுக்கு இடமளிக்க வேண்டிய தேவையும் டெல்லி தலைமை உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில், அமித்ஷா சில முக்கிய வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் அளித்துள்ளார். ஓபிஎஸ்ஸை நம்பி வந்தவர்களுக்கு இடம் அளிக்க, பாஜக கோட்டாவில் 12 முதல் 15 சட்டமன்ற தொகுதிகள் வரை ஒதுக்குவது குறித்து பேசலாம் என்று அமித்ஷா கூறியுள்ளார். மேலும், “நீங்கள் நம்முடன் தொடர்ந்து நில்லுங்கள். எல்லாமே சரியாகும்,” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக தலைமை ஓபிஎஸ்ஸை அழைத்து பேசியதற்கு காரணம், வெறும் அதிமுகவின் ஒருங்கிணைப்பு மட்டுமல்ல; தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் அரசியல் நகர்வுகளும் முக்கிய பங்கு வகித்துள்ளன. தவெக தலைமையில், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ்ஸின் அணி ஆகியவை இணைந்து ஒரு மூன்றாவது பெரிய அணி உருவானால், அது அதிமுக கூட்டணிக்கு விழ வேண்டிய வாக்குகளை பிரித்து, மறுபடியும் திமுகவின் வெற்றிக்கு உதவியாக போய்விடுமோ என்று டெல்லி பாஜக தரப்பு அஞ்சுகிறது. இந்த வாக்கு சிதறலை தடுக்கவும், NDA பலவீனமடைவதை தவிர்க்கவும் பாஜக தலைமை முயற்சி செய்து வருகிறது.
அமித்ஷா அளித்த 12 சீட் ஆஃபர் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு உள்ளது. அவரது உரிமை மீட்பு கழகத்தினர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானோர் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தெளிவாக தெரிவித்துள்ளனர். பாஜக கோட்டாவில் சீட்டுகளை பெற்று NDA கூட்டணியில் சேர்ந்தால், மீண்டும் பழனிசாமியை முதலமைச்சராக்கவே போராட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த கூட்டணிக்குள் செல்ல வேண்டுமானால், அதிமுக கட்சியில் ஓபிஎஸ்-ஸுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட வாய்ப்பு மிகக் குறைவு என்பதால், பெரும்பாலானோர் நோ பாஜக கூட்டணி என்ற நிலையிலேயே இருக்கின்றனர். ஒருவேளை ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கி பாஜக கோட்டாவில் இணைந்தால், இந்த கழகம் மீண்டும் உடையும் வாய்ப்பு அதிகம் என்றும் அந்த வட்டாரத்தினர் எச்சரிக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக, அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு சென்னைக்கு வந்து எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம் என்று அமித்ஷா கூறியதால், ஓபிஎஸ் தனது அடுத்தக்கட்ட முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
