நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் விஜய், கூட்டணி குறித்து ஒரு உறுதியான முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை, விசிக, தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளுடன் த.வெ.க. கூட்டணி அமைக்கும் என்ற யூகங்கள் நிலவி வந்தன. ஆனால், இக்கட்சிகள் எதையும் கூட்டணிக்குள் சேர்க்க வேண்டாம் என்று விஜய் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் மட்டுமே பரிசீலிக்கலாம் என்றும், இல்லையேல் தனித்து நின்று போட்டியிட தயாராக இருப்பதாகவும் விஜய் தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கூட்டணி அமைத்தால் தான் வெற்றிபெற முடியும் என்ற கலாச்சாரத்தை மாற்ற விரும்புவதாக விஜய் கூறி வருகிறார். தனித்து நின்று வெற்றி பெறுவதே தனது முதல் இலக்கு என்றும், அதன் மூலம் அரசியலில் ஒரு புதிய புரட்சியை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் விஜய், தனது கட்சி வேட்பாளர்களாக புதிய மற்றும் நேர்மையான முகங்களை நிறுத்த திட்டமிட்டுள்ளார். குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பெண்கள், ஒவ்வொரு துறையின் வல்லுனர்கள் தான் தவெக வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது, வாக்காளர்களுக்கு ஒரு மாற்று தேர்வை வழங்கும் என்றும், பாரம்பரிய அரசியலுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்றும் அவர் கருதுகிறார்.
கட்சி மாநாடுகள் மற்றும் சந்திப்புகள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டுவதே த.வெ.க.வின் முக்கிய வியூகம். விஜய்யின் இந்த முடிவு பல கோணங்களில் விவாதிக்கப்படுகிறது.
சில விமர்சகர்கள், இது ஒரு துணிச்சலான முடிவு என்றும், இது விஜய்க்கு மக்கள் மத்தியில் தனியான அடையாளத்தை கொடுக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், அ.தி.மு.க., தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தனி சக்தி உருவாக இது உதவும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம், தனித்து போட்டியிடுவது என்பது ஒரு பெரிய சவாலானது என்றும், விஜய்க்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு ஓட்டுகளாக மாறுவது கடினம் என்றும் சிலர் கூறுகின்றனர். கடந்த காலங்களில் பல பிரபலங்கள் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் ஒரே தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளையும் வீழ்த்துவது என்பது சவாலானது என்றும் கூறப்பட்டு வருகிறது.
விஜய்யின் இந்த முடிவால், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நாட்களில், அவரது நிலைப்பாடு தமிழக அரசியலில் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
