கிணற்றுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. எட்டிப் பார்த்தவர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. எமனையே வென்ற மூதாட்டி

By John A

Published:

மயிரிழையில் உயிர் தப்பினார் என்று படித்திருப்போம்.. சில வேளைகளில் புல் தடுக்கி விழுந்தவர்களுக்குக் கூட மரணம் நிகழும். ஆனால் இங்கு ஓர் பாட்டி கிணற்றுக்குள் 6 மணி நேரமாகத் தவித்து எமனுடன் போரிட்டு மீண்டும் உயிருடன் திரும்பி வந்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், குட்டலாடம்பட்டியைச் சேர்ந்தவர் ராசம்மாள். 78 வயது மூதாட்டி. ராசம்மாளுக்கு வயோதிக பிரச்சினைகளால் பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. சம்பவத்தன்று சாலையில் நடந்து செல்லும்போது அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். ஆனால் இவரை யாரும் கவனிக்கவில்லை. காலை 9 மணியளவில் கிணற்றுக்குள் விழுந்தவர் மாலை 3 மணிவரை நீரில் தத்தளித்திருக்கிறார். மேலும் கிணற்றுக்குள் இருந்து காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்று மரண ஓலம் எழுப்பியிருக்கிறார்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. விடுமுறையை நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை

அப்போது அந்த வழியாக நடந்து சென்றவர்களுக்கு கிணற்றுக்குள் ஏதோ ஓர் அலறல் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த போது மூதாட்டி உள்ளே இருந்து கூக்குரல் எழுப்புவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கிணற்றினுள் இறங்கி மூதாட்டி ராசம்மாளை மீட்டு மேலே கொண்டு வந்தனர். கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நீருக்குள்ளே தத்தளித்தவாறு தன்னுயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்திருக்கிறார் மூதாட்டி.

80 அடி ஆழமுள்ள கிணற்றில் சுமார் 5 அடி ஆழமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியின் உயிர் தப்பியது. மீட்கப்பட்ட மூதாட்டி முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.