தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 233 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி, ஒரு முழுமையான அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்த முயல்கிறது. எடப்பாடி தொகுதியில் தொழில்நுட்ப காரணங்களால் வேட்புமனு ரத்தானதை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் தவெக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இருப்பினும், புதிய கட்சி என்ற ரீதியில் களத்தில் அக்கட்சி சந்திக்கும் சவால்கள் மலைக்க வைப்பதாக உள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட திராவிட கட்சிகளின் பூத் மட்ட அளவிலான கட்டமைப்புக்கு முன்னால், தவெக-வின் தேர்தல் பணி இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே தடுமாறி கொண்டிருக்கிறது.
பல தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்கான அடிப்படை தேவைகளான பிட் நோட்டீஸ் அச்சடிப்பது, சுவர் விளம்பரங்கள் செய்வது போன்றவற்றுக்குக்கூடப் போதிய நிதி வசதி இல்லாமல் நிர்வாகிகள் திணறி வருகின்றனர். திராவிட கட்சிகளின் அசுரத்தனமான பண பலத்திற்கும், தாராளமான தேர்தல் செலவுகளுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவெக மாவட்ட செயலாளர்களே தடுமாற்றத்தில் உள்ளனர்.
கட்சித் தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலேயேகூட, நிர்வாக ரீதியான சவால்கள் பெரும் சுமையாக இருப்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்திக்கும் நேரடி பிரச்சாரத்தில் தவெக இன்னும் வேகம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அமைப்பு ரீதியாக பார்க்கும்போது, இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் வலுவான பேச்சாளர்கள் தட்டுப்பாடு தவெக-வுக்கு ஒரு பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. நாஞ்சில் சம்பத், லயோலா மணி போன்ற ஒரு சிலரை தவிர, மாநிலம் தழுவிய அளவில் மக்களை ஈர்க்கக்கூடிய நட்சத்திர பேச்சாளர்கள் அக்கட்சியில் குறைவாகவே உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய வலுவான இரண்டாம் கட்டத் தலைமை இல்லாதது, அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கு ஒருவிதமான தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை தந்துள்ளது. வேட்பாளர்களின் முகங்கள் பல தொகுதிகளில் மக்களுக்கு இன்னும் பரிச்சயமாகாத சூழலில், கட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஒரு தனி நபரின் பிம்பத்தை மட்டுமே நம்பி பயணிக்கிறது.
இத்தனை இடர்பாடுகளுக்கும் மத்தியிலும், தவெக நிர்வாகிகளிடம் ஒரு அசைக்க முடியாத தன்னம்பிக்கை நிலவுகிறது. அதற்கு முக்கிய காரணம், கட்சி தலைவர் விஜய்யின் அசுரத்தனமான மக்கள் செல்வாக்கு. மதுரை மாநாட்டில் விஜய் குறிப்பிட்டது போல, “ஒவ்வொரு தொகுதியிலும் இந்த விஜய்தான் போட்டியிடுகிறேன்” என்கிற வாசகம் தொண்டர்கள் மத்தியில் வேதவாக்காக பதிந்துள்ளது. வேட்பாளரின் பெயரோ, முகமோ தெரியாவிட்டாலும், ‘தளபதி’ என்கிற ஒற்றை அடையாளம் ஓட்டு சாவடி வரை தங்களை கொண்டு சேர்க்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். “தலைவரின் முகமும், விசில் சின்னமும் போதும்; அதுவே கோட்டையின் கதவை திறக்கும்” என்பதே அடிமட்ட தொண்டர்களின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.
மொத்தத்தில் தவெக எதிர்கொள்ளும் இந்த போராட்டம் என்பது ‘பண பலம்’ மற்றும் ‘பிம்ப பலம்’ ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு யுத்தமாக மாறியுள்ளது. நிறுவனமயமாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை, ஒரு தனி மனிதரின் ஈர்ப்பு சக்தி சிதைக்குமா என்பதுதான் இத்தேர்தலின் மிகப்பெரிய கேள்வி. போதிய வசதிகள் இல்லாவிட்டாலும், விஜய்யின் மீது மக்கள் கொண்டுள்ள அன்பு எல்லா தடைகளையும் உடைக்கும் என்று தவெகவினர் கருதுகின்றனர். களத்தில் இருக்கும் சவால்களை தாண்டி, மக்களின் மனங்களில் பதிந்துள்ள ‘விசில்’ சின்னம் வாக்கு இயந்திரத்தில் எதிரொலித்தால் மட்டுமே, விஜய் சொன்ன அந்த ‘மாற்றம்’ சாத்தியமாகும். தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் பிம்ப அரசியலின் புதிய எல்லையை தீர்மானிக்க போகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
