கோவை: கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வைத்த ஜிஎஸ்டி குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொழில் துறையினருக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முன்னிலையில் தொழில் முனைவோருடன் நேரடியாக விவாதித்தார். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், “உங்கள் அருகில் உள்ள கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி எங்களின் ரெகுலர் கஸ்டமர். வரும்போது எல்லாம் சண்டை போடுகிறார்.
காரணம் இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். கார வகை உணவுகளுக்கு 12 % ஜிஎஸ்டி நிர்ணயித்துள்ளீர்கள். பேக்கரி உணவுகளில் பன், ரொட்டி தவிர மற்ற உணவுகளுக்கு 28% ஜிஎஸ்டி ஆக இருக்கிறது
ஒரே பில்லில், ஒரு குடும்பத்துக்கு வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதற்கு எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜிஎஸ்டி ஆக மாறிவிடுகிறது.
அதனால் வாடிக்கையாளர்கள், ‘நீ கிரீமையும், ஜாமையும் கொண்டு வா.. நானே வைச்சுக்கிறேன்.’ என்று சொல்கிறார்கள். கடையை நடத்த முடியவில்லை. அதனால எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வரியை அமல்படுத்த உத்தரவிடுங்கள். முடிந்தால் வரியை ஏற்றுங்கள் அல்லது குறையுங்கள்.ஆனால் பேக்கரி தொழிலுக்கு ஒரே விதமான வரியை கொண்டு வாருங்கள்
உங்கள் அருகில் உள்ள எம்எல்ஏ தான் இதையெல்லாம் செய்கிறார். அவர் எங்கள் தொகுதியில் (கோவை தெற்கு தொகுதியில்) உள்ளார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜிஎஸ்டியும் நிர்ணயித்துள்ளதாக கூறுகிறார்.
தமிழகத்தில் ஸ்வீட், காரம், காப்பி என்ற அடிப்படையில் தான் விற்பனையாகும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஓட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள்.
ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட்டம் அதிகம் இருக்கும் போதும், கூட்டம் குறைவாக இருக்கும்போதும் ஒரே வரி தொகை நிர்ணயிக்கப்படுகிறது. சீசன் காலகட்டத்தில் தொகை அதிகமாக இருக்கும். மற்ற நாள்களில் அந்த தொகை இருக்காது. அதற்கு இந்த முறையில் வரி நிர்ணயிப்பது நியாயம் இல்லை. எனவே, எங்களின் இந்த கோரிக்கையையும் பரிசீலினை செய்யுங்கள்.” இவ்வாறு சீனிவான் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “நாங்கள் மாநிலம் வாரியாக எல்லாம் வரி நிர்ணயிக்கவில்லை. ஜிஎஸ்டி மற்றும் தொழில் துறை தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று விளக்கம் அளித்தார்.
இதனிடையே தொழில்துறையினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், தொழில்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக நமது நாட்டின் 1,500 தொழில்சட்டங்களை எடுத்து விட்டோம். 40 ஆயிரம் புகார்களை குறைத்துள்ளோம். இதற்காக கடந்த 2016-ம் ஆண்டில் இருந்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை(தொழில் வளர்ச்சி வங்கி) மத்திய அரசு திறக்க உள்ளது. 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முத்ரா திட்டத்தில் இதுவரை 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைப்பு தொடர்பாக இங்கு பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்றார்.