நரசிம்மராவ் செய்த அதே தவறை செய்கிறாரா ராகுல் காந்தி.. 1996 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என ஒட்டுமொத்த தமிழக காங்கிரஸ் கூறியது.. ஆனால் நரசிம்மராவ் கேட்கவில்லை. விளைவு ரிசல்ட் ஜீரோ.. அதேபோல் திமுக கூட்டணி வேண்டாம் என தமிழக காங்கிரஸ் இப்போது கூறுகிறதா? ராகுல், சோனியா எடுக்கும் முடிவால் தான் தமிழக காங்கிரசின் எதிர்காலம் இருக்கிறாதா?

தமிழகத்தில் வரவிருக்கும் கூட்டணி விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை எடுத்துள்ள அல்லது எடுக்கவிருக்கும் நிலைப்பாடு, 1996ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவை நினைவூட்டுவதாக அரசியல்…

narasimha rao

தமிழகத்தில் வரவிருக்கும் கூட்டணி விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை எடுத்துள்ள அல்லது எடுக்கவிருக்கும் நிலைப்பாடு, 1996ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவை நினைவூட்டுவதாக அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தும் இப்போதைய சூழல், அன்றைய வரலாற்றின் துயரமான நிகழ்வுகளை மீண்டும் பிரதிபலிப்பதாக உள்ளது. நரசிம்மராவ் செய்த அதே தவறை ராகுல் காந்தி மீண்டும் செய்வாரா என்ற கேள்வி, தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

1996ஆம் ஆண்டு தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் இருந்தது. மக்களின் அதிருப்தியால் மூழ்கியிருந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஜி.கே. மூப்பனார் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், அ.தி.மு.க. கூட்டணியை நிராகரிக்க வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். ஆனால், தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருந்த நிர்பந்தங்கள் மற்றும் பிரதமர் நரசிம்மராவின் தனிப்பட்ட முடிவுகள் காரணமாக, அவர் தமிழக தலைவர்களின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்தார்.

இதன் விளைவாக, ஜி.கே. மூப்பனார் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். த.மா.கா.வும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்து சந்தித்த அந்த தேர்தலில், நரசிம்மராவ் முடிவால் உருவான காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்து மிக மோசமான தேர்தல் வரலாற்றை பதிவு செய்தது. ஒரு தேசியக் கட்சி மாநில தலைவர்களின் குரலுக்கு செவி சாய்க்காததன் விளைவாக, தமிழக காங்கிரஸின் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியானது.

இன்று, ஏறத்தாழ அதேபோன்ற ஒரு நிலைமை தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மாநில தலைவர்களிடையே அக்கூட்டணியில் தொடர விருப்பம் இல்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், செல்வாக்கு நிறைந்த தொகுதிகள் ஒதுக்குவதில்லை என்றும், தங்களது அரசியல் வலிமையை மீட்டெடுக்க முடியவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்கின்றனர்.

இதன் காரணமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போன்ற மாற்றுச் சக்தியுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளும், மரியாதை நிறைந்த பங்களிப்பும் கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த மாற்று தேடலின் மூலம், மாநிலத்தில் கட்சிக்கு ஒரு புதிய தொடக்கம் கொடுக்க முடியும் என்று அவர்கள் தேசிய தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். 1996இல் நரசிம்மராவ் மாநில தலைவர்களின் எச்சரிக்கையை கேட்க மறுத்த நிலையில், இன்று, தமிழக காங்கிரஸின் குரல் மீண்டும் டெல்லி தலைமையால் கேட்கப்படுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி எடுக்கும் முடிவை பொறுத்தே தமிழக காங்கிரஸின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. டெல்லி தலைமை மீண்டும் தி.மு.க.வுடன் கைகோர்த்தால், மாநில தலைவர்கள் மீண்டும் ஒருமுறை அதிருப்தியடைந்து, 1996இல் மூப்பனார் செய்ததுபோல, கட்சியை விட்டு விலகி மாற்று அரசியல் முடிவுகளை எடுக்க நேரிடும். இது தமிழக காங்கிரஸை மேலும் பலவீனமாக்கும். மாறாக, ராகுல் காந்தி துணிச்சலாக த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், கட்சிக்கு புதிய எழுச்சி கிடைக்க வாய்ப்புள்ளது.

1996ஆம் ஆண்டின் வரலாற்று தவறிலிருந்து காங்கிரஸ் டெல்லி தலைமை பாடம் கற்று, தமிழக தலைவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து, மாநிலத்தில் கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முடிவை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.